M K Stalin

"மத நம்பிக்கை அவரவருக்குச் சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானது அல்ல" -முதலமைச்சர் பேச்சு !

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.09.2022) வானகரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபையின் (CSI ) பவள விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஆற்றிய உரை "தென்னிந்திய திருச்சபையின் பவளவிழாவை கடந்த ஆண்டு தொடங்கி வைத்து நான் உரையாற்றினேன். இன்றைய தினம் நிறைவு விழாவிலும் பங்கெடுக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.நான் இல்லாமல் நீங்கள் இல்லை, நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்பதன் அடையாளமாக இது அமைந்திருக்கிறது.

நீங்களும் என்னை அழைக்கத் தவறுவதில்லை, நானும் உங்களுடைய அழைப்பை என்றைக்கும் மறுத்தது இல்லை என்பதன் அடையாளமாக இந்த நிகழ்ச்சி, இந்த விழா, எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த விழாவிலே, நம்முடைய கழகம், ஆட்சிப் பொறுப்பேற்று அல்லது தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற இந்த நேரத்தில், ஆற்றியிருக்கக்கூடிய பணிகளை, சாதனைகளை சிலவற்றைக் குறிப்பிட்டுக்காட்ட வேண்டும் என்ற உணர்வோடு நான் வந்தேன். ஆனால், அந்தப் பணியை எனக்கு விட்டு வைக்காமல், நம்முடைய இனிகோ இருதயராஜ் அவர்கள், அவரே முந்திக் கொண்டு அனைத்தையும், தெளிவாக, விளக்கமாக, விரிவாக உங்களிடத்தில் அவர் எடுத்து வைத்திருக்கிறார். எனவே, அதற்குள் அதிகமாக நான் செல்ல விரும்பவில்லை..

1947 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்கு அடுத்த மாதம் செப்டம்பர் 27-ஆம் நாள் தென்னிந்தியத் திருச்சபை தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் இருக்கின்ற திருச்சபைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல்பட வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்தத் திருச்சபை தொடங்கப்பட்டது.

1947-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதற்கான முயற்சிகள் அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கின்றன.கே.டி.பால்,திருச்சபை ஒருமைப்பாட்டின் சிற்பி எனப் போற்றப்படும் ரெவரண்ட் அசரியா,வீ.சாண்டியோகா ஆகியோர் ஆரம்ப காலத்தில் இந்த முயற்சியை எடுத்துள்ளார்கள். அதாவது மொழி, நிறம், சாதி, ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லாமல், எதுவும் இல்லாததாகத் திருச்சபைகளை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை உருவாக்கி இருக்கிறார்கள்.அதனால்தான் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்லாமல், இலங்கையும் இணைந்ததாக இந்தத் திருச்சபை விளங்கி வருகிறது. 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய திருச்சபைகளில் ஒன்றாக விளங்குவதற்குக் காரணம் இந்த ஒற்றுமை உணர்வுதான். ஒற்றுமை உணர்வுதான் நம்மை எப்போதும், என்றும் காப்பாற்றும். அதனை உணர்ந்த காரணத்தால்தான் உங்களது திருச்சபையின் குறிக்கோளாக ஒற்றுமையையே வலியுறுத்தி வருகிறீர்கள்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! - என்ற பைபிள் வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு”"அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (That they all may be one) என்பதை முழக்கமாக வைத்திருக்கிறீர்கள்.இதுவே அனைவரது முழக்கமாக, எண்ணமாக மாறுமானால் நாடு அமைதி தவழும் பூமியாக இப்போது மட்டுமல்ல, எப்போதும் இருக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமில்லை.

இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழ்கின்ற நாடு. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வாழ்கிறோம்.அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்குச் சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானதாக இருக்காது.இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பெரும்பாலும் அன்பைப் போதிப்பதாகத்தான் இருக்கின்றன.“உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்றுதான் இயேசு கிறிஸ்து அவர்கள் கூறுகிறார். இயேசு கிறிஸ்து இந்த மனித குலத்துக்குக் கற்றுத்தந்த மதிப்பீடுகளை வரிசைப்படுத்தினால் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றைத்தான் சொல்ல முடியும்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம்.யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம்.அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை.ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம்.உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிர்தல். இதைத் தான் கிறிஸ்தவம் சொல்கிறது.இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும்." என்று பேசினார்