M K Stalin

"Temporary பதவியில் இருக்கும் பழனிசாமிக்கு திமுகவை பற்றி பேச தகுதி இல்லை.." - முதலமைச்சர் பதிலடி !

வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தியின் இல்லத்திருமண விழா மதுரை கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தலைமையேற்று நடத்தி வைத்தார். அதன்பின் அவர் உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மேடையில் பேசியதாவது, “நீங்கள் எல்லாம் சமூக ஊடகங்களில், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதை. ஆனால் அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களே அவரிடம் பேசுவதில்லை. இதில் தி.மு.க எம்.எல்.ஏ வந்து பேசுகிறார்கள் என்று புரூடா விட்டுக்கொண்டிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி. இன்றைக்கு அந்தக் கட்சி, அ.தி.மு.க ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் என்று இரண்டு அணிகளாகப் பிளவுபட்டிருக்கிறது.

இப்ப அவர் இருக்கும் பதவியே Temporary பதவி. இந்த ‘Temporary’ பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க இவருக்குத் தகுதி இருக்கிறதா?. நானும் இந்த நாட்டில் இருக்கேன் என்று காட்டிக் கொள்வதற்காகதான் இந்த காமெடி கதையை எல்லாம் விட்டுக் கொண்டு இருக்கிறார்.

நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறேன். நல்லது செய்யவே இப்போது நேரமில்லை. இப்படி கெட்டதை, பொய்யை, திட்டமிட்டு செய்யக்கூடிய பொய்ப்பிரச்சாரத்தைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. அதற்கெல்லாம் நேரமே இல்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

மக்கள் நமக்கு நன்மை செய்ய வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்த நன்மையை மட்டும் செய்வோம். மக்களுக்காக வாழ்வோம். அப்படிப்பட்ட பணியைச் செய்துகொண்டிருக்கக் கூடிய அமைச்சரவையிலேதான் மூர்த்தியும் அமைச்சராக இருந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். அவருடைய வீட்டுச் செல்வங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்." என்றார்.

Also Read: “குழந்தைகளைக் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” : முதலமைச்சர் உருக்கமான அறிக்கை !