M K Stalin

"'டெல்லியின் போராளி' அரவிந்த் கெஜ்ரிவால்.." - டெல்லி முதல்வருக்கு, தமிழக முதலமைச்சர் புகழாரம் !

தமிழ்நாட்டின் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கல்வி பயின்ற பெண்களின் திருமண உதவிக்காக கலைஞரின் தி.மு.க ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அதனை விரிவுபடுத்தி 'தாலிக்கு தங்கம்' என்ற திட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.

இந்த நிலையில், தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 'தாலிக்கு தங்கம்' என்ற திட்டத்தை மாற்றி, 'மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி திட்டம்' என்ற பெயரில் அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேரவிருக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர், இந்த புதுமையான திட்டத்திற்கு 'புதுமைப் பெண்' என பெயரை மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் தினமான இன்று (05.09.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் இந்த முத்தான திட்டத்தை சென்னை இராயபுரத்தில் பாரதியார் மகளிர் கல்லூரியில் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் 'அரவிந்த் கெஜ்ரிவால்' கலந்து கொண்டு "26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சிறப்பு விருந்தினராக வந்திருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

அதில் அவர் பேசியதாவது, "டெல்லி மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, முதலமைச்சர் என்று அழைப்பதை விட 'டெல்லியின் போராளி' என்று அழைப்பதுதான் பொருத்தமானது. ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருந்தாலும் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக தனது வேலையில் இருந்து விலகி அரசியலில் இறங்கி - இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வளர்ந்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அதேபோல் தனது கட்சியை பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியில் அமர்த்திவிட்டார். எப்போதும் துடிதுடிப்புடனும் பரபரப்புடனும் இருக்கும் இவர், அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கக் கூடிய மனிதராக இருக்கிறார். அவர் தமிழகத்துக்கு வந்திருப்பதும், சென்னை பாரதி மகளிர் கல்லூரிக்கு வந்திருப்பது கிடைத்த பெருமையாகும்.

cm mk stalin delhi visit

அன்று நான் டெல்லி சென்றிருந்த போது அங்கிருக்கும் வகுப்பறைகளை போய்ப் பார்த்தேன். என்னோடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் வந்திருந்தார். நாடு நவீனமயமாவதைப் போல நம்முடைய வகுப்பறைகளும் நவீனமயமாக வேண்டும்; இளைய தலைமுறையின் உள்ளத்தை ஈர்க்கக் கூடியதாக வகுப்பறைகள் அமைய வேண்டும் என்று அப்போது திட்டமிட்டோம்.

'அதே போல தமிழகத்திலும் உருவாக்குவோம் - அதனை நீங்கள் வந்து திறந்து வைக்க வேண்டும்' என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நான் கேட்டுக் கொண்டேன். அதனை ஏற்று தற்போது இங்கு வந்துள்ளார்

இரண்டு நாட்களுக்கு முன்பு மிகக்கடுமையான அரசியல் சூழல் டெல்லியில் நிலவியது. அதைப் பற்றி கூட பொருட்படுத்தாமல் தான் ஒரு போராளிதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் இங்கு வருகை தந்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Also Read: காலத்தால் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை அள்ளி தருபவர்கள் ஆசிரியர்களே.. முதல்வரின் ஆசிரியர் தின வாழ்த்து!