M K Stalin

"நமது அரசு சட்டத்தின் அரசாக, சமூகநீதி அரசாக செயல்பட்டு வருகிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனின் மாண்புகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்கு சுயமரியாதை இயக்கம் என்று தான் பெயர் சூட்டினார்கள்.சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம்.

மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான். சுயமரியாதை - தன்மானம் - மனிதாபிமானம் - மனித உரிமைகள் ஆகிய அனைத்தும் ஒரே பொருளைத் தரக் கூடிய வேறுவேறு சொற்கள் தான்.அதனால் தான் தனிமனிதனின் சுயமரியாதையாக இருந்தாலும், ஒரு இனத்தின் தன்மானமாக இருந்தாலும், மானுடக் கூட்டத்தின் உரிமைகளாக இருந்தாலும் அவை எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவை எல்லாம் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் கருத்துக்கள் மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டம் சொல்வதும் இதனைத் தான். அரசியலமைப்புச் சட்டத்தின் மிகமிக அடிப்படை என்பது மனித உரிமைகள் தான்.

* சமத்துவ உரிமை,

* பேச்சுரிமை,

* எழுத்துரிமை,

* எண்ணங்களை வெளியிடும் உரிமை,

* ஒன்று கூடும் உரிமை,

* பணிகள் செய்யும் உரிமை,

* மத சுதந்திரம்,

* கல்வி உரிமை,

* சொத்துரிமை போன்றவை பாதிக்கப்பட்டால் அதற்காக பரிகாரம் காணும் உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் உரிமை அனைத்து அரசுக்கும் உண்டு.

எனது தலைமையிலான நமது அரசானது சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - சமூகநீதியின் அரசாக செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.எனவே தான் நீதித்துறையினரின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்து வருகிறோம். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சேமநல நிதியானது 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நீதித்துறையின் உள்கட்டமைப்பு தேவைகளுக்காக பல்வேறு நீதிமன்றங்கள் அமைக்கும் வகையில் 4.24 ஏக்கர் நிலத்தை நீதித்துறைக்கு அரசு வழங்கி உள்ளது. 9 அடுக்கு கட்டடம் கட்ட 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தயாராக இருக்கிறோம்.

நீதிதுறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்த வெள்ளி ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை வழங்க விரும்புகிறேன்.

* மாநில மனித உரிமை ஆணையத்தின் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

* அதேபோல் மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்" இவ்வாறு கூறினார்.

Also Read: “எங்கள் தமிழ்நாட்டை பார்த்தால் ஏன் எரிகிறது? - நிர்மலா சீதாராமனுக்கு நிதானம் தேவை”: பாடம் எடுத்த முரசொலி!