M K Stalin

"துபாயில் இங்குதான் செல்லப்போகிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?" : Expo2020 புகைப்படங்கள் இதோ..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து, துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று திறந்து வைக்கிறார். தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுருங்கக் கூறினால், இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு, இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Also Read: துபாய் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துபாய், அபுதாபியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?