M K Stalin
“தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்திய மத்திய பா.ஜ.க அரசு” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பா.ஜ.க அரசு வெளிப்படுத்தியுள்ளது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு வெளியிடப்பட்ட நிலையில் மாநில மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அசாமி, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் கல்வி உரிமைகளை முழுமையாகப் பறித்து, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் சமவாய்ப்பற்ற புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து கல்வியாளர்கள் எதிர்ப்பும் எச்சரிக்கையும் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனுக்கு எதிரான இந்தப் புதிய கல்விக் கொள்கை இந்தி - சமஸ்கிருத ஆதிக்கத்திற்கும் வழிவகுப்பதால், இக்கொள்கையைத் தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வந்துள்ளது.
இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் பன்முகத்தன்மைக்கு எதிராகவும் உள்ள புதிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசு, அக்கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும் பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. உருது உள்ளிட்ட அட்டவணையில் உள்ள மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை. புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ள மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிப்பதுடன், மாநில உரிமை - மொழி உணர்வு - மாணவர் எதிர்காலம் இவற்றுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!