M K Stalin
“ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்"- மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்புச் செய்திருப்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய பா.ஜ.க அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத்தமிழர்களுக்கு விரோதமான பா.ஜ.க அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்” என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே பேட்டி அளித்திருந்தார். அதனைச் சுட்டிக் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து கருத்துச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். மத்திய அரசு முறையான விளக்கம் எதையும் சொல்லவில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலாவது ஈழத்தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் உலகத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது மோடி அரசு.
இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பிரதிநிதி பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்துள்ளார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்.
இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை - உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இது தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது, துரோகமானது; எனவே மிகுந்த கண்டனத்திற்குரியது. இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்பது விளங்கிவிட்டது. இது இலங்கைக்கு மிகவும் சாதகமான நிலைப்பாடுதான் என்பதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுவிட்டது. வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத்தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் பச்சைத் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!