M K Stalin

“திமுக ஆட்சியில் பெண்களுக்காக காத்திருக்கும் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள்” -மு.க.ஸ்டாலின் உறுதியளிப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

உலக மகளிர் நாள் - மார்ச் 8!

தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்!

பெண்களின் உரிமைகள் கவனத்துடன் எப்போதும் பாதுகாக்கப்படுவதற்கும், அவர்கள் தற்சார்புடன் கூடிய தகுதி மிக்க முன்னேற்றம் அடைவதற்கும் குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழு, காவல்துறையில் பெண்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தியது தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு.

கழக ஆட்சி மலர்ந்ததும் அனைத்துக் குடும்பத் தலைவியருக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். எதிர்வரும் காலத்திலும் உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்களுக்கான பலவகைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.

சமுதாயத்தில் சரிபாதியளவில் உள்ள பெண்ணினத்தைப் பலபடப் பாராட்டிப் பெருமைப் படுத்தியிருக்கிறது தமிழ் இனத்தின் நிரந்தரத்துவம் பெற்ற இலக்கியங்கள். அத்தகைய பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் நாளாம் இன்று இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.

Also Read: விடியலுக்கான முழக்கம்: தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்!