M K Stalin
“உள்ளாட்சி கேளிக்கை வரி 50% தள்ளுபடி.. கேரள அரசை பின்பற்றுங்கள்” - அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
"வரி செலுத்தச் சலுகை - கால அவகாசம்!"
"கேரள அரசின் முன்னுதாரணத்தைத் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு பின்பற்ற வேண்டும்!" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கொரோனா பரவலின் தொடக்கத்திலிருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும் - அனைத்துத் தொழில்களும் வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது.
Also Read: “உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்று வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை உடனடியாக நிறுத்துக” : மு.க.ஸ்டாலின்
அதனடிப்படையில், திரைத்துறைக்கான சலுகைகளையும் கேரள இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31 வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 மாதங்களுக்கான திரையரங்க மின்கட்டணம் 50% தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்தவும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள அரசு.
தமிழகத்தில் திரைத்துறையைக் கனவுத் தொழிற்சாலை என அழைக்கின்றனர். பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில்கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அ.தி.மு.க. அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, கொரோனா பேரிடர் காலத்தில் பாதிப்பிற்குள்ளான அனைத்துத் தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தினை மீட்டிடும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!