M K Stalin

“பா.ஜ.க-அ.தி.மு.க அரசால் தமிழ்நாட்டுக்கு பின்னடைவு... இனியும் பொறுக்க முடியாது!” : மு.க.ஸ்டாலின் காட்டம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற 'தமிழகம் காப்போம்' மாநில மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று, சிறப்புரை ஆற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், "மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் 'தமிழகம் காப்போம்' என்ற முழக்கத்தோடு முன்னெடுக்கப்படும் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமையும் அடைகிறேன்!

தமிழகம் மீட்போம் என்ற முழக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடர்ந்து உரையாற்றி வருகிறேன். ஐந்து மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட மக்களோடும் பேசிவிட்டேன்.

நாங்கள் சொல்லும் 'தமிழகம் மீட்போம்' என்பதாக இருந்தாலும் - மக்கள் விடுதலைக் கட்சி சொல்லும், 'தமிழகம் காப்போம்' என்பதாக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான்.

தமிழகத்தை மீட்டால் தான் தமிழகத்தைக் காக்க முடியும். எங்களை விட முருகவேல்ராஜன் கொஞ்சம் அட்வான்ஸாக இருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்!

தனக்கென ஒரு லட்சியம் கொண்டு - அதற்காக அஞ்சாமல் போராடுகின்ற ஆற்றல் மிக்க மனிதராக இருக்கக் கூடியவர் முருகவேல்ராஜன் அவர்கள்.

உரிமை பெற்றவர்களாக, உணர்வு பெற்றவர்களாக மனிதர்கள் வாழ வேண்டும் என்பதற்காகப் போராடும் மனிதர்.

கல்வி பெற்ற சமூகமாக - வேலைவாய்ப்புகள் பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதற்காக நாளும் உழைப்பவர்.

அதிகாரம் பெற்ற சமூகமாக உயர வேண்டும் என்று அயராது உழைப்பவர். அத்தகைய முருகவேல்ராஜனை 'விடுதலை நெருப்பு' என்று மக்கள் விடுதலைக் கட்சித் தோழர்கள் அழைப்பது பொருத்தமானது தான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தோடு அவர் தொடர்ந்து பணியாற்றி வருவதற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவரின் நெறியை வாழ்வியல் நெறியாகக் கொண்ட சமூகம்தான் தமிழ்ச் சமூகம். இதற்குள், வருணாசிரமம் என்று புகுந்ததோ, அன்றே தமிழர் ஒற்றுமையும் சிதைந்தது. வளர்ச்சியும் சிதைந்தது.

வள்ளலார், வைகுண்டர், பண்டித அயோத்திதாசர், தந்தை பெரியார் ஆகியோர் நம் சமூகத்தின் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் தொடர்ந்து போராடினார்கள்.

அதிலும் குறிப்பாகப் பண்டித அயோத்திதாசர் அவர்கள், தமிழர்கள் அனைவரையும், 'சாதி பேதமற்ற திராவிடர்காள்' என்று அழைத்தார். தமிழர்கள் என்று ஒருமுகப்படுத்தினார். தந்தை பெரியார் அவர்கள் அந்த இயக்கத்தை விரிவுபடுத்தினார்.

படிக்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்று உரிமை மறுக்கப்பட்டவர்கள் உணர்வு பெறுகிற இயக்கம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகத் தான் மக்கள் விடுதலைக் கட்சி போன்ற அமைப்புகளைப் பார்க்கிறேன்.

திராவிட இயக்கம் என்பதே அனைத்துத் தமிழ் மக்களின் உயர்வுக்கான இயக்கம் தான். தமிழர்களுக்குள் பிரிவுகள் இல்லை. அதை விட முக்கியமாக மேல், கீழ் என்ற பேதம் இல்லை என்பதை உருவாக்க முயற்சிக்கும் இயக்கம்!

மதத்தைக் காட்டி, இனத்தைக் காட்டி மக்களை அடிமை கொள்ள முயற்சிப்பவர்கள் இருக்கும் வரை மக்கள் விடுதலைக் கட்சிகள் தேவை.

'நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற காரணத்தால், பின் தங்கிய வகுப்பினர் நலனுக்காக என்னுயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்'' என்று முதன் முதலில் முதலமைச்சர் ஆனபோது கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னார்கள்.

''எனக்கென்று சாதிப்பெருமை கிடையாது. மிகமிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது. ராவ் பகதூர், திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் பெருமை எனக்கில்லை, கல்லூரிப் பட்டம் எனக்கில்லை. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிக் கல்லூரியும் தான். நான் பட்டம் பெறாதவன் என்றாலும் பகுத்தறிவுப் பணியாளன்.

சாதிப்பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே என் சாதியென மதிப்பவன் நான்" - என்று பேசினார். அப்படித்தான் செயல்பட்டார். அத்தகைய மக்களுக்காகத் தான் இயக்கம் நடத்தினார்.

1969 ஆம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சர் ஆன கலைஞர் அவர்கள் தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் தனித்தனியே உருவாக்கினார்கள்.

1989 கழகம் ஆட்சியின் போது,

பட்டியலின மக்களுக்கு 18 சதவிகிதமும்-

பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும்-

பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமும்-

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமும்-

பொதுப்பிரிவினருக்கு 31 சதவிகிதமும் வழங்கிய தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

* ஆதிதிராவிடர் நலத்துறை

* அவர்களுக்கான இடஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் வீட்டுவசதிக்கழகம்

* ஆதிதிராவிட மாணவர்க்கு இலவசப் புத்தகங்கள்

* இலவசப் பகல் உணவு

* ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் குடியிருப்புகள்

* மாணவர் இல்லங்கள்

* நவீன வசதியுள்ள விடுதிகள்

* உழவு மாடுகள் வாங்கக் கடன்

* தரிசு நிலங்கள் வழங்கியது.

* வீட்டுமனைகள்

* மாநில ஆதிதிராவிடர் நலக்குழு

* மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு

* தீண்டாமைக் குற்றங்களைக் கண்காணிக்க குழு

* அம்பேத்கர் பெயரால் சட்டப்பல்கலைக் கழகம், மகளிர் கல்லூரி

* அம்பேத்கர் திரைப்படத்துக்கு நிதி உதவி

* அம்பேத்கர் பெயரால் விருது

* அம்பேத்கர் நூற்றாண்டு விழா

* மதம் மாறிய ஆதிதிராவிடர்களைப் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இணைத்தல்

* அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு

* சமத்துவபுரங்கள்

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

- என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

தி.மு.கவைப் பொறுத்தவரை இது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையைச் சட்டமாக்கும்! ஆட்சியில் இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடும்!

பட்டியல் இனச் சமூகமாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் தமிழர்களாக நினைத்துப் பாதுகாக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அவர்களது பாதுகாப்புக்கு நலத்திட்டங்களை உருவாக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி.

விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள் உயர்வுக்காக நடத்தப்பட்ட ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.

ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான ஆட்சி திமுக ஆட்சி. ஆனால் இன்று நடப்பது ஆட்சியல்ல, காட்சி மட்டும் தான்!

அதனால் தான் முருகவேல் ராஜன், தமிழகம் காப்போம் என்று முழக்கமிடுகிறார். தமிழகம் காப்போம் என்றாலே தமிழகம் திருடு போய்க்கொண்டு இருக்கிறது என்று பொருள். தமிழகம் உரிமையை இழந்து தடுமாறிக் கொண்டு இருக்கிறது என்று பொருள்.

ஒரு காலத்தில் புகழ் மிக்க தமிழகமாக இது இருந்தது. ஆனால் இன்று அடிமைத் தமிழகமாக இருக்கிறது.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். மாநிலத்தை ஆள்வதும் காங்கிரசு கட்சி. மத்தியில் ஆள்வதும் காங்கிரசு கட்சி. ஆனாலும் தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்களைக் கேட்டுப் பெற்றார் காமராசர். வாதாடி வாங்கினார் காமராசர்.

சமூகநீதியைக் காப்பாற்றத் தந்தை பெரியார் அவர்கள் போராடிய போது, திராவிட இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நேருவை வலியுறுத்தியவர் காமராசர்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சித் தீர்மானத்தையே சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனப் போராடினார்.

அவசர நிலைப்பிரகடனத்தை வெளிப்படையாக எதிர்த்து தீர்மானம் போட்டார் முதல்வர் கலைஞர்.

ஆனால் இன்றைக்கு இருக்கிற எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சரணாகதி அரசியல் நடத்தி வருகிறார்.

அரசியல் ரீதியாக ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி கூட்டணி வைப்பதை நாம் விமர்சிக்கவில்லை. அந்தக் கூட்டணியின் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்தால் அதைப் பற்றி நாம் கேள்வி எழுப்பப்போவது இல்லை. தமிழ்நாட்டை அடமானம் வைத்து பழனிசாமி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்கிறார் என்றால் அதை நாம் கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது!

திராவிட முன்னேற்றக் கழகம், மத்தியில் பல்வேறு கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்துள்ளது.

பிரதமர் வி.பி.சிங், பிரதமர் குஜ்ரால், பிரதமர் தேவகவுடா, பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் அமைச்சரவையில் கழகம் அங்கம் வகித்துள்ளது. அப்போதெல்லாம் தமிழகத்துக்கு என்ன மாதிரியான திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதை இன்று முழுவதும் என்னால் சொல்ல முடியும்!

ஆனால் நரேந்திர மோடியை ஆதரித்ததன் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்ன திட்டம் கொண்டு வந்தார்?

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததா? 2015 இல் இருந்து ஐந்து ஆண்டுகளாக எய்ம்ஸ் நாடகம் நடக்கிறதே தவிர, எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை.

மாநில உரிமைகள் அடமானம்!

நிதி உரிமைகள் அடமானம்!

தமிழக சட்டசபைத் தீர்மானத்துக்கு மரியாதை இல்லை!

பேரிடர் கால நிதி தருவது கிடையாது!

ஜி.எஸ்.டி நிதி கிடையாது!

இந்தி திணிக்கப்படுகிறது!

தமிழ் புறக்கணிக்கப்படுகிறது!

கீழடி பெருமையை மறைக்கப்படுகிறது!

சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டப்படுகிறது!

சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது!

இப்படி தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட மொத்த பின்னடைவையும் கடந்த பா.ஜ.க - அ.தி.மு.க காலத்தில் பார்த்துவிட்டோம்! இனியும் பொறுக்க முடியாது.பொங்கி எழுவோம்!

தமிழகம் மீட்போம்! தமிழகம் காப்போம்!" என உரையாற்றினார்.

Also Read: "அறிவாயுதத்தால் வெல்வோம்; சமூகநீதி சுடரை அணையாமல் காப்போம்!"- பெரியார் சமூகநீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின்!