மு.க.ஸ்டாலின்

"அறிவாயுதத்தால் வெல்வோம்; சமூகநீதி சுடரை அணையாமல் காப்போம்!"- பெரியார் சமூகநீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின்!

நெல்லையில் நடைபெற்ற பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் பங்கேற்று நிறைவுரையாற்றினார்.

"அறிவாயுதத்தால் வெல்வோம்; சமூகநீதி சுடரை அணையாமல் காப்போம்!"- பெரியார் சமூகநீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரும் தந்த அறிவாயுதத்தால் சமூகநீதி காப்போம்” என நெல்லை சமூகநீதி மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (27.12.2020) நெல்லையில் நடைபெற்ற பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் பங்கேற்று நிறைவுரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“பெரியார் சமூகநீதி மாநாட்டை எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் திருநெல்வேலியில் ஏற்பாடு செய்துள்ள எழுத்தாளர் சூர்யா சேவியர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலையில் இருந்து அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்கள் பங்கெடுத்த மாபெரும் சமூக நீதிமாநாடாக நடத்திக் காட்டி இருக்கிறீர்கள்.

கொரோனா காலம் என்பதாலும், தேர்தல் பணிகளும் பரபரப்புகளும் அதிகமாகி வருவதாலும் நேரடியாக நெல்லை வந்து இம்மாநாட்டில் பங்கெடுக்க இயலாத சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது. உங்களது எழுச்சியைக் காணும் போது, நேரில் வர இயலாத வருத்தம் கூடுதலாகிறது. இருந்தாலும், உங்களது உணர்ச்சியை, எழுச்சியை நானும் பெறுகிறேன். இதற்குக் காரணமான சூரியா சேவியரை மீண்டும் நான் பாராட்டுகிறேன்.

சூர்யா சேவியர் அவர்கள் திராவிட இயக்கச் சிந்தனையாளர் மட்டுமல்ல, பயமற்ற போராளியாகவும் திகழ்ந்து வருகிறார். நம்மை நோக்கி- திராவிடக் கொள்கைகளை நோக்கி- தி.மு.கவை நோக்கி- யார் எந்த அவதூறு செய்தாலும் அதற்கு முதலில் எதிர்வினை ஆற்றுகிற மனிதராக சூர்யா சேவியர் இருப்பார்.

தனது கருத்துக்களைத் துணிச்சலாக ஆணித்தரமாகச் சொல்வார். அவரது வீடியோக்கள் பலவற்றை நானும் பார்த்திருக்கிறேன்.

சிலர் சத்தமாக பேசுவார்கள். ஆனால் கருத்து இருக்காது. சிலர் கருத்தாகச் சொல்வார்கள். ஆனால் கேட்க சுவாரஸ்யம் இருக்காது. ஆனால் சூர்யா சேவியர் பேச்சு கருத்தாழம் உள்ளதாகவும் இருக்கும். கேட்கவும் இனிமையாக இருக்கும். அத்தகைய ஆற்றலாளர்கள் இந்த இயக்கத்துக்கு இன்னும் அதிகமாகத் தேவை. ஏனென்றால் திராவிட இயக்கம் என்பதே கருத்துப் பிரச்சார இயக்கம்தான். கருத்தை கருத்தால் வெல்லவே நினைக்கும் இயக்கம். பொய்யை வெல்வதற்கான உறுதி உண்மைக்கு மட்டும் தான் இருக்கிறது.

திராவிட இயக்கத்தை யாராலும் ஏன் வெல்ல முடியவில்லை என்றால் - நாம் உண்மையை பேசுகிறோம்! நீதியைப் பேசுகிறோம்! அதுவும் சமூகநீதியைப் பேசுகிறோம் மக்களுக்காகப் பேசுகிறோம்! அதனால் தான் நம்மை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. வீழ்த்தவும் முடியாது!

பெரியாரைப் பார்த்து இன்னமும் பயப்படுகிறார்கள். இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆனபிறகும் பயப்படுகிறார்கள். பேரறிஞர் அண்ணாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். கலைஞர் என்ற பெயரைச் சொன்னால் இன்னமும் சிலருக்கு பயமாக இருக்கிறது.

என்ன காரணம்? இவர்கள் ஆயுதம் ஏதும் வைத்திருந்தார்கள்ளா? ஆயுத அமைப்பை நடத்தினார்களா? இல்லை! இவர்கள் வைத்திருந்தது அறிவாயுதம்!

இவர்கள் வைத்திருந்தது உண்மை என்ற கேடயம்! அறிவும் உண்மையும் ஒரு இயக்கத்திடம் இருக்குமானால் அந்த இயக்கத்துக்கு வேறு எதுவும் தேவையில்லை.

அத்தகைய அறிவியக்கமாம் திராவிட இயக்கம் இந்தத் தமிழ் மக்களுக்குத் தயாரித்துக் கொடுத்த கொடை தான் சமூகநீதி!இடஒதுக்கீடு! வகுப்புவாரி உரிமை!

அந்தச் சமூகநீதித் தத்துவத்தின் நூற்றாண்டு விழாவை தான் நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். 1920 ஆம் ஆண்டு என்பது வரலாற்றின் மிக மிக முக்கியமான ஆண்டு! இந்தியாவுக்கு முதலில் தேர்தல் நடந்த ஆண்டும் அதுதான்! தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் நீதிக்கட்சி ஆட்சி சென்னை மாகாணத்தில் மலர்ந்த ஆண்டும் அதுதான்!

அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் அந்தக் கட்சிக்குள்ளேயே சமூகநீதியை வலியுறுத்திய ஆண்டும் அதுதான்! இத்தகைய வரலாற்றுப் பெருமைகள் கொண்ட ஆண்டு அது! அத்தகைய சமூகநீதியின் நூற்றாண்டு விழாவை திருநெல்வேலியில் நடத்துவது பொருத்தமானது. அதற்கான வரலாற்று நிகழ்வுகளுக்குள் நான் அதிகம் போக விரும்பவில்லை. அனைவரும் அறிந்தது தான்.

1920 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தைக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களும்- தந்தை பெரியார் அவர்களும் கொண்டு வருகிறார்கள். ஆலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேறிவிடுகிறது. ஆனால் பொதுமாநாட்டில் நிறைவேற விடாமல் தடுத்துவிடுகிறார்கள்.

1921 - தஞ்சாவூர் மாநாட்டிலும்

1922 - திருப்பூர் மாநாட்டிலும்

1923 மதுரை, திருச்சி, சேலம் மாநாடுகளிலும்,

1924 திருவண்ணாமலை மாநாட்டிலும் இதே தீர்மானத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொண்டு போகிறார்கள். ஆனால் அதனைச் சதி செய்து தடுத்துவிடுகிறார்கள்.

1925 - காஞ்சிபுரம் மாநாட்டிலும் தீர்மானத்தைக் கொண்டு போகிறார் பெரியார். தடுத்துவிடுகிறார்கள். இதன் பிறகுதான் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் அவர்கள் தொடங்கினார்கள். நீதிக் கட்சியின் தலைவராக ஆனார்கள்.

சுயமரியாதை இயக்கமும் - நீதிக்கட்சியும் இணைந்து திராவிடர் கழகமாக உருவாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் தீர்மானம் அடித்தளம் அமைத்தது.

சீர்திருத்த இயக்கத்துக்கு அரசியல் முகம் தேவை என்ற அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள்.

இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த திராவிட இயக்கம் உருவாக அடித்தளமே சமூகநீதி என்ற கொள்கை தான்.

அன்று முதல் இன்று வரை நமது எல்லாப் போராட்டங்களுக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது சமூகநீதித் தத்துவம்தான்!

இந்தச் சமூகநீதிக்குக் குழி தோண்டுவதாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதை வேடிக்கை பார்க்கிறது அ.தி.மு.க அரசு.

குழிதோண்டுபவர்கள் மட்டுமல்ல, அதனை வேடிக்கை பார்ப்பவர்களும் குற்றவாளிகள் தான்!

சமூகநீதிக்குத் துரோகம் இழைப்பதே பாஜக அரசின் ஒரே நீதி, நியதி என்பதை நித்தமும் அவர்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள்!

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை மேலும் மேலும் ஒடுக்கும் அரசாக மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது!

கொரோனா காலத்து ஊரடங்கை அடித்தட்டு மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துகிறது மத்திய பாஜக அரசு.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மூலமாக சமூகநீதிக்கு சவக்குழி தோண்டிவிட்டார்கள்!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை!

இந்த ஆண்டே நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் சொன்னார்கள். இந்த ஆண்டு நிறைவேற்ற முடியாது என்று பாஜக அரசு நீதிமன்றத்திலேயே சொல்கிறது. இது தொடர்பாக அகில இந்தியத் தலைவர்கள் அனைவருக்கும் நான் கடிதம் எழுதினேன். பாஜக அரசுடன் சேர்ந்து அதிமுகவும் துரோகம் செய்தது. இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க போராடவில்லை.

* மருத்துவத்துறையில் அகில இந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஆயிரக் கணக்கான இடங்களைக் கடந்த 6 ஆண்டுகளாக கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறது பாஜக அரசு. இதுதான் இவர்களது சமூகநீதி!

''11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை நிறைவு செய்வதற்காகப் பட்டியலின மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித் தொகையை இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 60 லட்சம் மாணவர்கள் பெற்று வந்தார்கள். இது தொடர்பாக மத்திய அமைச்சரவை பரிசீலனை செய்தது. நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி அதனை நிறுத்திவிட முடிவு செய்துள்ளார்கள். இந்தத் தொகையை 2017 ஆம் ஆண்டு முதல், படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்து இப்போது முழுமையாக நிறுத்திவிட்டார்கள்" என்று சொல்லி இருக்கிறது 'எகனாமிக் டைம்ஸ்'. இதைவிடப் பட்டியலின மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் காரியம் இருக்க முடியாது!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இடஒதுக்கீடு, சமூகநீதியை மொத்தமாக எடுத்துவிட வேண்டும் என்பது தான் பாஜகவின் கொள்கை. அதைப் படிப்படியாகச் செய்து வருகிறார்கள்.

எந்தச் சூழ்நிலை வந்தாலும் சமூகநீதியை, இடஒதுக்கீட்டை, வகுப்பு உரிமையை விட்டுத் தர மாட்டோம் என்பதுதான் நமது கொள்கை.

எனவே இந்த இது பா.ஜ.க அரசு அல்ல, சமூகநீதிக்கு பாதகம் செய்யும் செய்யும் அரசு என்று தான் அழைக்க வேண்டும்!

திராவிட இயக்கக் கொள்கைகளை ஒருவர் எதிர்க்கிறார் என்றால் அவர் சமூகநீதியின் எதிரியாக இருப்பார்!

திராவிட இயக்கத்தை ஒருவர் ஆதரிக்கிறார் என்றால் அவர் சமூகநீதியின் ஆதரவாளராக இருப்பார்!

ஒருவர் சரியானவரா இல்லையா என்பதற்கு ஒரே ஒரு அளவுகோல்தான் இருக்கிறது. அவர் சமூகநீதிக்கு ஆதரவாளரா இல்லையா? என்பதுதான்!

சமூகநீதியை எதிர்க்கிற அனைவரும் தி.மு.கவை எதிர்க்கிறார்கள். தி.மு.கவை எதிர்ப்பவர்கள் அனைவரும் சமூகநீதியின் எதிரியாக இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வை அடைந்துவிடுவார்கள், ஏழைகள் ஏற்றம் பெற்றுவிடுவார்கள் என்று நினைப்பவர்கள்தான் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த ஒரு நோக்கத்துக்காகத்தான் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

சிலர் அமைச்சர் ஆவதற்கு, சிலர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்காக நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. தமிழர்களாகிய பலர் - கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் - இலட்சக்கணக்கான ஏழை மக்கள்- வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகத் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரும் நினைக்கிறார்கள்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் சமூக நீதி என்பதாகும்.

* அனைத்துச் சமூகத்தவருக்குமான இடஒதுக்கீட்டை 1921 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி!

* இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாகப் போராடி 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும் அண்ணாவும்!

* வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் ஆக்கியது திமுக!

* பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக்கியது திமுக!

* இந்த 18 சதவீதத்தில் பழங்குடியினரும் இருந்தார்கள். அவர்களுக்குத் தனியாக 1 சதவீதம் வழங்கி, முழுமையாகப் பதினெட்டு சதவீதமும் பட்டியலினத்தவருக்குக் கிடைக்க வழி செய்தது திமுக!

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை முதலில் செயல்படுத்தியது திமுக.

* மதம் மாறிய ஆதிராவிட கிறிஸ்தவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது திமுக!

* வன்னியர் உள்ளிட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 சதவீதமாகப் பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனப் பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது திமுக!

* கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டு வந்தது திமுக!

* அருந்ததியர்க்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக!

* இசுலாமியர்க்குத் தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக!

* வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை மண்டல் ஆணையம் மூலமாக பெற்றுத் தந்தது திமுக. மத்திய அரசுப் பணிகளில் உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணம் திமுக.

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றியது திமுக!

* கோவில் அறங்காவலர் குழுவில் பெண்கள், ஆதிதிராவிடரை இடம்பெற வைத்தது திமுக!

- இப்படி அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக - அனைத்து சமூகத்தவர்க்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக - சமூகநீதி அரசாகச் செயல்பட்டது தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.

இந்த அரசைத்தான் ஆதிக்க வர்க்கத்தினர் எதிர்க்கிறார்கள்.

எல்லார்க்கும் எல்லாம் என்று சொல்பவர்கள் நாம்!

எல்லாம் எங்களுக்கு மட்டுமே என்று சொல்பவர்களுக்கு இது பிடிக்கவில்லை!

எதிர்வரும் தேர்தல் என்பது எல்லாம் எங்களுக்கு மட்டுமே என்று சொல்பவர்களுக்கும் - எல்லார்க்கும் எல்லாம் என்று சொல்பவர்களுக்குமான போராட்டம் ஆகும்!

எல்லார்க்கும் எல்லாம் என்று சொல்பவர்கள் வென்றால் மட்டும் தான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும். இதனைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் கடமையை சூர்யா சேவியர் போன்ற சமூகப் போராளிகள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் தனது இறுதிச் சொற்பொழிவில் கவலையுடன் பேசினார்கள்.

“நான் இந்த நாட்டுக்கு எதையும் சாதித்துவிடவில்லை, சிலர் படித்துள்ளார்கள், சிலர் வேலைக்கு போயுள்ளார்கள், ஆனால் முழுமையான பயனை தமிழர்கள் அடையவில்லை” என்று வருந்தினார்கள்.

அதனால் தான் பெரியார் அவர்கள் இறந்தபோது, 'பெரியார் பணியை முடித்தார்; நாம் தொடர்வோம்' என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

இன்று பெரியாரும் இல்லை, அண்ணாவும் இல்லை, கலைஞரும் இல்லை! அவர்கள் ஏந்திய சமூகநீதி என்ற அறிவாயுதம் நம்மிடம் இருக்கிறது. அந்த அறிவாயுதத்தால் வெல்வோம்! சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories