M K Stalin

“இனமான பேராசிரியரின் ஒவ்வொரு பிறந்தநாளும்  கல்வி உதவிகள் வழங்கும் விழாவாக நடைபெறும்” - மு.க.ஸ்டாலின்

“பேராசிரியர் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளும் மாணவர்களுக்குக் கல்வி உதவிகள் வழங்கும் விழாவாக நடைபெறும்” என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று (19.12.2020) இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை ஒட்டி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் கல்லூரி மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி உரையாற்றினார். கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்களின் வயது இன்று 98. ஆனால் 98 –ஆம் ஆண்டு வயதில் அவர் இன்றைக்கு நம்முடன் இல்லை. பேராசிரியரைப் பொறுத்தவரையில் எனக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம். என்ன ஏமாற்றம் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 95 ஆண்டுக் காலம் வாழ்ந்து இருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் 94 வருட காலம் வாழ்ந்திருக்கிறார். பேராசிரியர் அவர்கள் 97 ஆண்டுக் காலம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் எனக்கு இருந்த குறை, வருத்தம் என்னவென்று கேட்டால், இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதா, வாழ்ந்திருந்தால் 100 ஆண்டுக்காலம் வாழ்ந்த திராவிடத் தலைவராக விளங்கிக் கொண்டிருப்பார்கள் என்பதுதான்.

அவர் உடல் நலிவுற்று, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்கள் அவரை அடிக்கடி சந்தித்து உடல் நலம் விசாரிக்கச் செல்வோம். செல்கின்ற போதெல்லாம் 100 ஆண்டு காலம் நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள். இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் நீங்கள் இருந்து உங்களுக்கு நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுவோம்’ என்று சொல்வோம். அப்படி இல்லாமல் போனதுதான் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ஒரு திராவிடld தலைவராக, தமிழர் தலைவராக, சுயமரியாதைத் தலைவராக, தன்மானத் தலைவராக இருந்து நமக்கு வழிகாட்டியவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள்.

நமது அன்புச்செல்வன் அவர்கள் அருகில் உட்கார்ந்து இருந்தபோது, “ஒரு மகனாக இருந்து நான் அவரைக் கவனித்ததை விட நீங்கள் தான் அவரை அதிகமாகக் கவனித்தீர்கள்” என்று என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். நான் அவரையும் என்னையும் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. ஏனென்றால், நான் அவரைப் பெரியப்பா என்றுதான் சொல்லி இருக்கிறேன். பெரியப்பா என்று சொல்லிக் கொண்டிருந்த நான் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, நான் பேராசிரியர் அவர்களை அப்பாவாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் உண்மை. ஆனால் அவர் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை.

இங்கே பாலு அவர்கள் பேசுகிற போது தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பேராசிரியர் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பின், பாசத்தின் நெருக்கம் பற்றிச் சொன்னார், நம்முடைய தலைவர் அவர்களுக்கும் பேராசிரியர் அவர்களுக்கும் நட்பு எவ்வாறு இருந்தது? எப்படி ஒரு பாசம் இருந்தது? எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது ஒரு கட்சி பிரச்சனையோ, குடும்பப் பிரச்சனையோ ‘பேராசிரியர் இடத்தில் சொல்லு’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். உடனே பேராசிரியர் இடத்தில் சென்று சொன்னால் அவர்கள் ‘இது கலைஞருக்குத் தெரியுமா’ என்று கேட்பார்கள். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது இருவருக்கும். அந்த அளவுக்கு நம்பிக்கைக்குரிய, நட்பிற்கு உரிய மனிதராக பேராசிரியர் அவர்கள் விளங்கினார்.

தன்னுடைய மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். சுயமரியாதை எண்ணத்தோடு எதையும் வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர் பேராசிரியர் அவர்கள். அவர்களிடத்தில் நான் எத்தனையோ படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக அன்புச்செல்வன் அவர்களும், வெற்றி அவர்களும் அறிவாலயத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர்களிடத்தில் நான் ஒன்றைச் சுட்டிக் காட்டினேன். அலுவலகத்தில் பேராசிரியர் அவர்கள் இருக்கும் பொழுது கட்சி நிர்வாகிகள் யாராவது வந்தால், மரியாதை கொடுக்கும் விதமாக யாரும் உட்கார மாட்டார்கள். உட்காருங்கள் என்று பேராசிரியர் அவர்கள் சொல்வார்கள்.

அதற்கு அவர்கள் நாங்கள் நிற்கிறோம் என்று சொல்வார்கள். அதற்கு அவர் நாற்காலி எதற்குப் போடப்பட்டுள்ளது, உட்காருங்கள் என்று சொல்வார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் பேராசிரியர் அவர்கள். அதைத்தான் நான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். யாராவது அறிவாலயத்திற்கு வந்தால், உட்காருங்கள் என்று இரண்டு மூன்று தடவை சொல்லிப் பார்ப்பேன். அவர்கள் உட்காரவில்லை என்றால் வெளியே சென்று விடுங்கள் என்று சொல்லிவிடுவேன். பேராசிரியரிடமிருந்து இதைக் கற்றுக் கொண்டேன்!

எதற்குச் சொல்கிறேன் என்றால், பேராசிரியர் அவர்கள் சிறியவர், பெரியவர் என்று பார்க்க மாட்டார். யாராக இருந்தாலும் சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தவர் பேராசிரியர் அவர்கள். அவர் அடிக்கடி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்; தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார். ‘முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் தமிழன், மூன்றாவது நான் அன்பழகன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞர் அவர்களின் தோழன்’ என்று சொல்வார். அப்படித்தான் வாழ்ந்து நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.

அவர் சட்டமன்றத்திலே உறுப்பினராக இருந்து பணியாற்றியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இருந்து தனது கடமையை நிறைவேற்றி இருக்கிறார். ஏன் மேலவையில் அவர் உறுப்பினராக இருந்து பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். நான்கு முறை அமைச்சர் பதவி ஏற்று கல்வித்துறை அமைச்சராக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக, நிதித்துறை அமைச்சராக தன்னுடைய பணியை நிறைவேற்றி கழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். கழகத்தின் பொதுச்செயலாளராக 40 ஆண்டுகாலம் இருந்திருக்கிறார்.

இங்கே நான் ஒரு செய்தியைச் சொல்லி ஆகவேண்டும்; தலைமைக் கழகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று கலைஞர் அவர்கள் முடிவு செய்தார். அப்பொழுது ஒரு பிரச்சனை வந்தபோது, தலைவர் அவர்கள் பேராசிரியர் இடத்தில் கேட்டார்கள். அப்பொழுது, கட்சியில் நான் துணைப் பொதுச் செயலாளராக இருந்தேன். பொருளாளராக என்னை நியமிக்கத் தலைவர் பேராசிரியர் இடத்தில் அனுமதி கேட்டார்கள். ‘இதெல்லாம் என்னிடத்தில் கேட்கவேண்டுமா? நீங்கள் முதலமைச்சராக, துணை முதலமைச்சராக வேண்டுமானாலும் ஆக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு எனது முடிவாகும்.’ என்று சொன்னார். இவ்வாறும் எதையும் வெளிப்படையாகப் பேசி நமக்கு வழிகாட்டியாக இருந்தவர்.

எனவே, அவரது பிறந்த நாளை எளிமையாக, இனிமையாக, அதிலும் குறிப்பாக அவர் விரும்பியபடி, கல்வி கற்கக் கூடிய மாணவச் செல்வங்களுக்குப் பயன்படக்கூடிய வகையில், கல்வி உதவித் தொகை – கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவாக நடைபெறுகிறது. இது அவரது ஒவ்வொரு பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலும் நிச்சயமாக நடக்கும்; நடக்க வேண்டும். அதற்குத் திராவிட முன்னேற்றக்கழகம் உறுதுணையாக நிற்கும் என்பதை எடுத்துச் சொல்லி, வாழ்க பேராசிரியர் புகழ், வாழ்க பேராசிரியர் புகழ் என்று சொல்லி விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்.”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Also Read: “இனமான பேராசிரியரின் புகழ் போற்றி, இன்ப திராவிடத்தை காப்போம்.. களத்திலும் வெல்வோம்..” மு.க.ஸ்டாலின் மடல்!