M K Stalin
“இது மக்களை நச்சரிக்கும் திட்டம்; சொத்து வரிக்கு அபராதம் வசூலிப்பதை நிறுத்துக”-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சொத்து வரி தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்யுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ “ஒவ்வொரு அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை”, “அப்படி செலுத்தத் தவறினால் 16 ஆவது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்” என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது “வலது கையால்” ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, “இடது கையால்” அதைப் பறித்துக் கொள்வதுபோல் அமைந்திருக்கிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து- மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு, தற்போதுதான் மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பலர் வேலை இழப்புகளை சந்தித்து இன்னமும் கூட வேலை கிடைக்காமல், தங்கள் குடும்பத்திற்கு வருமானம் இன்றி வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தவிக்கிறார்கள். சில்லரை வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்போர், இன்னும் வருமான ரீதியாக குடும்பச் செலவுகளைக் கூட சமாளிக்க இயலாமல் நாள்தோறும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இது போன்ற சூழலில்- முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் 15 தேதிக்குள்ளோ, இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளோ கட்டவில்லை என்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும்- அது மாதிரி செலுத்தத் தவறியவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும் சிறிதும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல! கொரோனா காரணமாக, பொருளாதார- வருமான சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் சென்னை மக்களை மாநகராட்சி இப்படி மேலும் துயரப்படுத்துவது எவ்விதத்திலும் சரியல்ல.
எல்லா மட்டத்திலும் டெண்டர் ஊழலில் மக்களின் வரிப்பணம் தண்ணீர் போல் வாரி இறைத்துச் செலவழிக்கப்பட்டு- எடப்பாடி ஆட்சியில் ஊழலின் ஊற்றுக் கண்களில் ஒன்றாக இருக்கும் சென்னை மாநகராட்சி, சொத்து வரி வசூலில் இவ்வளவு கெடுபிடிகள் செய்ய வேண்டியதில்லை. ஏழை எளிய, நடுத்தர மக்கள் செலுத்தும் சொத்து வரியில், “அபராதம்” விதிக்கும் கெடுபிடியும்- ஊக்கத் தொகை 15 நாட்களுக்கு மட்டுமே அளிப்போம் என்பதும், மக்கள் நலத் திட்டம் அல்ல; மக்களை நச்சரிக்கும் திட்டமே ஆகும்!
ஆகவே கொரோனா பேரிடர் பாதிப்புகளை மனதில் வைத்து, ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஊக்கத் தொகை அளிக்க வழங்கப்பட்டிருக்கும் 15 நாட்கள் கால அவகாசத்தை, குறைந்த பட்சம் 45 நாட்களாக உயர்த்தி- அரையாண்டு வரி 5000 ரூபாய்க்குள் செலுத்துவோருக்கு இந்த ஊக்கத் தொகையை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் தற்போதுள்ள 2 சதவீத அபராதத் தொகையை அரை சதவீதமாக குறைத்திட வேண்டும் அல்லது அறவே ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!