M K Stalin
“ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா? : குழப்பமான அறிவிப்பு ஏன்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!
"பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இப்போது என்ன அவசரம்? தேதியைத் தள்ளி வைக்க வேண்டும்!" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவ - மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கவே செய்யும்.
மக்களின் மனநிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், திடீரென தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதல்வர்களுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும் போது, இத்தேர்வுத் தேதிகளை யாரைக் கேட்டு தமிழக அரசு முடிவு செய்கிறது? ஆசிரியர் - பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?
மே17-ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பதை அரசு இன்னமும் இறுதி முடிவு செய்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேர்வுத் தேதியை அறிவிக்க என்ன அவசரம், என்ன அவசியம்?
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையாமல், பெருகி வருவதால், தமிழகத்தில் விமானம் மற்றும் இரயில் போக்குவரத்தை மே 31-ம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். மே 31-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என்றால், போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, ஜூன் 1-ம் தேதி காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு எப்படி வருவார்கள்? மாணவர்கள் எத்தனை பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள் எனத் தெரியாது. இந்நிலையில் எதற்காக இத்தகைய குழப்பமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது; முறையானது. தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும் பெற்றோரையும் ஆசிரியர்களையும் மனரீதியாகத் தயார் செய்த பிறகு, தேர்வுத் தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும். நெருக்கடி மிகுந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தன் பங்குக்குக் குழப்பத்தை அதிகப்படுத்துவது நியாயமல்ல!
Also Read
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !
-
"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !