M K Stalin
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துக : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தஞ்சை பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டிருந்ததாவது,
“வருகிற பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோவில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது.
திராவிடக் கட்டடக்கலை என உலக வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் தமிழரின் பண்பாட்டுச் சின்னமாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பேரதியசமாக விளங்குகிறது தஞ்சைப் பெருவுடையார் கோவில்.
அந்தப் பெருங்கோவிலைக் கட்டிய மாமன்னன் இராராசசோழன் சிலைக்கே கோவில் வளாகத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது கடந்த கால வரலாறு. அதனால்தான், கோவிலருகிலேயே அதனைக் கட்டிய மாமன்னனின் சிலையை மக்கள் காணும் வண்ணம் நிறுவி, பூங்காவையும் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
வரலாறு நெடுகிலும் தஞ்சை பெரிய கோவிலில் தமிழர் பண்பாட்டின் வழிபாட்டுமுறைகள் சிதைக்கப்பட்டு, பிற பண்பாடுகளின் ஆதிக்கம் நுழைந்திருப்பதை உணர முடியும். அதை மாற்றி, தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு, தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என வலியுறுத்துகிறது.
கோவில்களில் தமிழ் வழிபாட்டையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவது என்பது தொடர்ச்சியான பண்பாட்டுப் போராட்டமாகும். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொன்மைமிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களான பல கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் என்ற வடசொல்லை நீக்கி குடமுழுக்கு என்ற தமிழ்ச் சொல்லைப் பரவலாக்கியதும் கழக அரசுதான்.
தமிழில் அர்ச்சனை என்பதில் தொடங்கி அனைத்து சமுதாயத் தமிழர்களும் அர்ச்சகர்களாவதற்கான சட்டம் வரை திருக்கோவில்களில் தமிழர் வழிபாட்டு முறையை நிலைநாட்டுவதில் தி.மு.க அரசு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டதையும், அந்த முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் தி.மு.க அரசு நடத்திய சட்டப்போராட்டங்களையும் நாடறியும்.
தொல்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்டிடும் முயற்சிக்கான போராட்டங்கள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. அந்த வகையில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்த வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.இந்த மாநாட்டின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என விரும்புகிறேன். ” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!