M K Stalin
“எடப்பாடி அரசின் கடன் ஊழல் செய்து நாளைக் கழிப்பதே” : ஆளுநர் உரையைப் புறக்கணித்த மு.க.ஸ்டாலின் அறிக்கை!
‘ஊழல் என்பதே நோக்கம்; பா.ஜ.க அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்’ என்று நடக்கும் அ.தி.மு.க ஆட்சியில், இந்த ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்பதனால் புறக்கணித்துள்ளோம்.” என தி.மு.க-வினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம்.
இந்த ஆட்சியில், முதலமைச்சரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மட்டுமல்ல; ‘முதலமைச்சர் எவ்வழி எங்களுக்கும் அவ்வழி’ என்று, துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்து வருகின்றனர். நுனி முதல் அடிவேர் வரை ஊழல் பாய்ந்தோடுவதால், மாநில நிர்வாகம் எனும் விருட்சம் உளுத்து, வலுவிழந்து, மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத ஒதியமரமாகி விட்டது.
கொடநாடு முதல் குட்கா வரை, ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம் வரை, செய்யாதுரை முதல் சேகர் ரெட்டி வரை, எங்கும் ரெய்டுகள், ரெய்டுகள், ரெய்டுகள், கணக்கற்ற ரெய்டுகள். “ரெய்டுகள்”என்பது நாள்தோறும் நடக்கும் சகஜ நிகழ்வாகி, மாநிலமே அவமானத்தால் கூனிக் குறுகிவிட்டது.
4 லட்சம் கோடி ரூபாய் கடன், 5 லட்சம் குற்றங்கள்- என கடன் சுமை எப்போதும் இல்லாதபடி ஏறியும், குற்றங்கள் பெருகியும் கூட, அது குறித்துக் கிஞ்சிற்றும் கலங்காமல், கடுகளவும் கவலைப்படாமல், ‘என் கடன் ஊழல் செய்து நாளைக் கழிப்பதே’ என்ற பாணியில் பொல்லாத ஆட்சி ஒன்று இங்கே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வில் இரட்டை வேடம்; தொழில் வளர்ச்சி இல்லை; சட்டம்-ஒழுங்கு சரியாகப் பேணப்படவில்லை; வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை; அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றும் அக்கறை இல்லை; விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்த ஆட்சியில் நிறைவோ, நிம்மதியோ இல்லை.
மதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து - நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்து, அது நிறைவேறக் காரணமாகி; சிறுபான்மை இஸ்லாமியர்க்கும், இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து; தவறுகளுக்கெல்லாம் உச்சகட்டத் தவறு இழைத்துவிட்டது எடப்பாடி அ.தி.மு.க.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம்- காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் - அ.தி.மு.க எனும் முக்கோணக் கூட்டணி அமைத்து; அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு.
நடுநிலையோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், யாருக்கும் பயன்படாத, அ.தி.மு.கவினர்க்கு மட்டுமே பயன்படுகிற, பொல்லாத - ஒருதலை ஆட்சியே இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மக்கள் நலனில் எப்போதும் ஏனோதானோவென நடந்து வரும் இப்படிப் பட்ட எதிர்மறை ஆட்சியில்; “ஊழல் என்பதே நோக்கம், பா.ஜ.க அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்”- என்று நடக்கும் அ.தி.மு.க ஆட்சியில்; ஏதோ சடங்குக்காகவும், சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!