M K Stalin

“உள்ளாட்சியின் தீர்ப்பு நல்லாட்சிக்கான முன்னோட்டம்; அடுத்த களத்துக்கு ஆயத்தமாவோம்” - மு.க.ஸ்டாலின் மடல்!

சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், சூதுமதியாளர்களை வீழ்த்தி மக்கள் தீர்ப்பை மாண்புறச் செய்வோம், அடுத்தடுத்த களங்களுக்கு இப்போதிருந்தே ஆயத்தமாவோம் என அறிவுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுந்தியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மனம் நிறைந்த நன்றி மடல்.

மக்களின் நம்பிக்கைக்குரிய பேரியக்கம் எந்நாளும் தி.மு.கழகமே என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தின் வேர்கள் காய்ந்துவிடக் கூடாது என்பதனால், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துங்கள், முறையாக நடத்துங்கள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தியது. அதனை உறுதிப்படுத்த சட்டரீதியான நடவடிக்கையாக நீதிமன்றங்களை நாடியது. ஆளும் அடிமை அ.தி.மு.க.வோ, தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது தள்ளிப் போடும் முயற்சியிலேயே கவனமாக இருந்து, தி.மு.க. தொடர்ந்த வழக்குகளைக் காரணம் காட்டி கடைசிவரை தப்பித்துக் கொள்ளலாம் என கணக்குப் போட்டது. உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அரசின் தலையில் ஓங்கிக் குட்டிய பிறகே, அதுவும் பகுதியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க அரசும் அதன்கீழ் செயல்படும் மாநிலத் தேர்தல் ஆணையமும் முன்வந்தன.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றைத் தவிர்த்துவிட்டு, ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால், கிராமப்புற மக்களை எதையாவது சொல்லி ஏமாற்றி, தங்கள் போலித்தனமான செல்வாக்கைக் காட்டி வெற்றி பெற்றுவிடலாம் என மனப்பால் குடித்தனர் அடிமை ஆட்சியாளர்கள். அதற்காக, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்தாசையுடன் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என ரத-கஜ-துரக-பதாதிகளுடன் களமிறங்கினார்கள். தேர்தல் விதிமீறல்களே, அறிவிக்கப்படாத விதிகளாக மாற்றப்பட்டன. வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் முதல் 25 கிலோ அரிசி மூட்டைகள் வரை ஆளுந்தரப்பினால் வழங்கப்பட்டன.

மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் கழகம் அளித்த புகார்கள் அனைத்தும் பொருளற்ற நிலைக்குள்ளாயின. உயர்நீதிமன்றத்தை கழகம் நாடியது. தேர்தல் விதிமுறைகளின்படி உரிய பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டும், அதனை மாநிலத் தேர்தல் ஆணையம் அலட்சியப்படுத்தியது. எப்படியாவது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவுகளைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்திற்குத் தலையாட்டுவதைப் போல மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்பட்டது.

இத்தனை அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் ஆணவச் செயல்பாடுகளையும் கடந்து, அவற்றை அலட்சியப் படுத்தி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கழகத்திற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் மகத்தான வெற்றியை அளித்துள்ளார்கள் தமிழக கிராமப்புற மக்கள். எத்து வேலைகள் செய்து யாரை எளிதாக ஏமாற்றிவிடலாம் என அடிமை அ.தி.மு.க. நினைத்ததோ அவர்கள் சற்றும் ஏமாந்திடாமல் தெளிவான-திட்டவட்டமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்கள்.

தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் தி.மு.கழக கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய 13 மாவட்டங்கள் பலவற்றிலும் தி.மு.க கூட்டணியின் வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அதுபோலவே, தேர்தல் நடைபெற்ற 314 ஒன்றியங்களில் உள்ள 5ஆயிரத்து 90 வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் தி.மு.க கூட்டணி 2ஆயிரத்து 356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் காரணமாக, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளிலும் தி.மு.கழக கூட்டணியே அதிக இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

ஆளுங்கட்சியும் மாநிலத் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கைகோர்த்துக் கொண்டு தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக மும்முனைத் தாக்குதல் நடத்திய நிலையிலும், தி.மு.கவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றியின் அளவு மகத்தானது. இன்னும் அதிகமான இடங்களில் கழகக் கூட்டணி பெற வேண்டிய வெற்றியினை ஆளுந்தரப்பு தன் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும் தட்டிப்பறித்துள்ளது. யார் பெற்ற குழந்தைக்கோ, தான் பெயர் வைப்பதுபோல நாம் பெற்ற வெற்றிகள் பலவற்றைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல், தங்களுடையதாகக் காட்டிக் கொண்டுள்ளது அவமானமிகு அ.தி.மு.க.

காவல்துறையினரை ஏவி, வாக்கு எண்ணும் மையங்களின் முன் திரண்டிருந்த உடன்பிறப்புகளை விரட்டி அடித்தனர். சுயேட்சை வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் தடியடி தாக்குதல் நடந்துள்ளது. அண்மைக்காலமாகவே காவல்துறையை சீரூடை அணிந்த ஆளுங்கட்சியினராக மாற்றும் போக்கினை அ.தி.மு.க மேற்கொண்டுள்ளது. அதுவும், மத்திய பா.ஜ.க. அரசின் விருப்பத்திற்கேற்ப, தமிழக காவல்துறையை இயங்கச் செய்யும் ஆபத்தான போக்கு அதிகரித்துள்ளது. கோலம் போட்ட பெண்களைக் கைது செய்து அவர்களைப் பாகிஸ்தானுடன் தொடர்பு படுத்தி, காவல்துறை ஆணையரே பேட்டி அளிப்பதும், தந்தை பெரியார் - தலைவர் கலைஞர் உள்ளிட்ட பலரையும் இழிவாகப் பேசி வன்முறைக்கு வித்திட்ட பா.ஜ.க. பிரமுகர்களைக் கண்டுகொள்ளாமல், இலக்கியச் சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதும் பச்சை எதேச்சதிகாரத்தின் பகிரங்கமான வெளிப்பாடாகும்.

Also Read: "ஆளுங்கட்சியின் அராஜக, அடாவடிகளை மீறி தி.மு.க பெற்றுள்ளது மகத்தான வெற்றி" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அந்த எதேச்சதிகாரப் போக்கினை ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் கடைப்பிடித்தது அ.தி.மு.க அரசின் கைப்பாவையான மாநிலத் தேர்தல் ஆணையம். தி.மு.கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பல இடங்களில் வாக்கு கணக்குகளை மாற்றும் மாயாஜால வேலைகள் நடந்துள்ளன. முடிவுகளை அறிவிக்காமல், விடிய விடிய இழுத்தடிக்கும் வேலையும் நடந்தது. வாக்குச்சீட்டில் உதயசூரியனிலும் தோழமைக் கட்சி சின்னங்களிலும் விழுந்த முத்திரைகளை செல்லாதவையாக அறிவிக்கும் தில்லுமுல்லுகள் அரங்கேறின. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அதிகாரிகள் (Returning Officer) பலருக்கு மேலிடத்திலிருந்து தொடர்ந்து உத்தரவுகள் வந்தபடியே இருந்தன. முறைகேடான முடிவுகளை அறிவித்தனர். நியாயம் கேட்டபோது, நீதிமன்றத்திற்குப் போய்க் கேட்டுக்கொள்ளுங்கள் என்று ஜனநாயக நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்தனர். இவற்றை எதிர்த்து நம்முடைய கழகத்தின் மாவட்ட - ஒன்றிய நிர்வாகிகளும், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் உறுதியாக நின்று போராடியதன் விளைவாகவே இந்த அளவுக்காவது நமக்கான வெற்றி உறுதியாகியிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை நாளன்று பகலிலும், இரவிலுமாக மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு நானே நேரில் சென்று முறையிட்டேன். நம்முடைய அமைப்புச் செயலாளரான மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நேரில் முறையிட்டார். இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முறைகேடுகள் நீடித்த நிலையில், மறுநாள் காலையில் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சென்று முறையிட்டார். கழக சட்டத்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் பல முறை புகார் அளித்தனர். எதற்கும் செவி சாய்க்காத, கேளா காதுகளுடனும், எந்த விதிகளையும் கடைப்பிடிக்காத மனசாட்சியற்ற இயந்திரமாகவும், ஆளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்பட்டது. இதனை மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் வாசலிலேயே ஊடகத்தினரிடம், ‘அண்ணா மீது ஆணை’யாக தெளிவுபடுத்திவிட்டு வந்தேன். தி.மு.கழகத்தின் சட்டப்போராட்டம் இனியும் தொடரும்; இறுதிவரை நிற்காது. சூறாவளி-புயல்காற்று-சுனாமி எல்லாவற்றையும் மொத்தமாக எதிர்கொண்டு, ஆளுந்தரப்பை வீழ்த்தி, அத்துமீறல்களைத் தகர்த்து தி.மு.க கூட்டணி அதிகமான இடங்களை வென்றுள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளுடன், அநீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளிலும் நீதிமன்றத்தின் வாயிலாக நியாயம் கிடைக்குமென்றால், சேலம்-கரூர் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களிலும் ஒன்றியங்களிலும் தி.மு.கழகக் கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார போதையில், வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த ஆளுந்தரப்புக்கு, வாக்காளப் பெருமக்கள் தமது திடமான தீர்ப்பின் மூலம், சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவின் மகனும் மகளும் தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவியுள்ளனர். மானாமதுரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ நாகராஜனின் மனைவி, மண்ணச்சநல்லூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் உள்ளிட்ட பல அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். சேந்தமங்கலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சந்திரசேகரனின் மகன் தோற்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பலரின் செல்வாக்காலும் பணபலத்தாலும் களம் கண்ட அ.தி.மு.க.வினர் பலரை மக்கள் மொத்தமாக நிராகரித்துள்ளனர்.

அதேநேரத்தில், தி.மு.க. சார்பிலும் தோழமைக் கட்சிகளின் சார்பிலும் களமிறக்கப்பட்ட எளியவர்களை-புதியவர்களை மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக- சேவகர்களாக விரும்பித் தேர்வு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் .ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.கழக வேட்பாளரான 22 வயது பட்டதாரி பெண் பிரீத்தி மோகன் வெற்றி பெற்றிருப்பது பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைத்துள்ளது. தனது குடும்பத்தினரின் கழகப் பற்றை எடுத்துக்கூறி, கழகத் தலைவர் வழியில் மக்களுக்குத் தொண்டாற்றுவேன் என அவர் தெரிவித்திருப்பதிலிருந்து, தலைவர் கலைஞர் அவர்கள் மூலம் நான் பெற்ற உறுதியும் உழைப்பும் கழகத்தின் வேர் வரை பரவியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

திருச்செங்கோடு ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்ட ரியா என்ற திருநங்கை வெற்றி பெற்றிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் கழகத்தின் வாயிலாக ஏற்பட்டிருக்கும் திருப்புமுனையாகும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மேலும் பல இளைஞர்கள், பட்டதாரிகள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

கட்சி சின்னங்கள் இல்லாத ஊராட்சி உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிக்கு எளிய பொதுமக்கள் பலர் வெற்றி பெற்றிருப்பதும் ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 82 வயது மூதாட்டியும், மேலூரில் 79 வயது மூதாட்டியும், தோவாளையில் 73 வயது மூதாட்டியும், கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவியும், விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளான எளிய மக்களுக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளாட்சியில் இன்று மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழகத்தில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம். மக்கள் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள ஆளுந்தரப்பு மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்களை நடத்துவதில் என்னென்ன தகிடுதத்தங்களை நடத்தப்போகிறது, எப்படியெல்லாம் தாமதப்படுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எத்தனை மோசடிகள் செய்தாலும், மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.கழகத்தின் வெற்றியைத் தடுத்திட முடியாது என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன.

File image : MK Stalin

இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட-ஒன்றிய நிர்வாகிகள், அவர்களுக்குத் துணையாக இருந்த கழக அமைப்புகளின் நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான கழகத்தின் தொண்டர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

தோல்வி கண்டால் துவள்வதுமில்லை, வெற்றி கண்டால் வெறிகொள்வதுமில்லை என்பதுதான் தலைவர் கலைஞர் நமக்கு கற்றுக் கொடுத்துள்ள அடிப்படை அரசியல் இலக்கணம். அந்த வகையில், இந்த வெற்றி நாம் மேலும் அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் தொண்டாற்றவும், கட்சிப் பணியாற்றவும் பயன்பட வேண்டுமே தவிர, ஆரவாரங்களுக்கும் கோலாகலங்களுக்கும் உரியதல்ல. ஆளுங்கட்சியின் அத்துமீறல்களைக் கடந்து வெற்றி பெற்ற இடங்களைப் போலவே, நம்முடைய அலட்சியப் போக்குகளாலும், ஒத்துழைப்பின்மையாலும், கவனச் சிதறல்களாலும் வெற்றி வாய்ப்பை இழந்த இடங்களும் உள்ளன. அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பெரும்பணியும் நமக்கு இருக்கிறது. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துப் பெறுகிறோம் என அறிவாலயம் நோக்கி உடனடியாகப் படையெடுப்பதையும் தவிர்க்க வேண்டுகிறேன். ஏனெனில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் என்பது இன்னும் நிறைவடையவில்லை.

ஜனவரி 11ஆம் நாள் மாவட்ட கவுன்சில் தலைவர்-ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாக்களித்து தமக்கான தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் இது. நேரடித் தேர்தலிலேயே பல மோசடிகளைச் செய்த அ.தி.மு.க., மறைமுகத் தேர்தலில் திரைமறைவுக் காரியங்கள் செய்ய, எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய அதிகாரபலத்தைக் கொண்டுள்ளது. அதனை முன்கூட்டியே உணர்ந்து முறியடித்து, கழகத்திற்கு மக்கள் அளித்துள்ள வெற்றியை, மாவட்ட கவுன்சில்-ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலிலும் உறுதி செய்திட வேண்டியது கழக உறுப்பினர்களின் பொறுப்பாகும்.

MK Stalin

பொதுக்குழு கூட்டத்தில் நான் எடுத்துக்காட்டியதைப் போல, “வெற்றி சாதாரணமாகக் கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள்” என்பதை மனதில் கொண்டு, எந்தக் கட்டத்திலும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், சூதுமதியாளர்களை வீழ்த்தி, மக்கள் தீர்ப்பை மாண்புறச் செய்வோம். அடுத்தடுத்த களங்களுக்கு இப்போதிருந்தே ஆயத்தமாவோம்!” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.