M K Stalin
4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள்: நேரில் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு மருத்துவர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் பேரணி நடத்திய மருத்துவர்கள், தமிழக அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அவசர சிகிச்சையையும் புறக்கணிக்கப் போவதாகத் எச்சரித்தனர். இதேபோல், சேலம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு மருத்துவனையில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும், 5 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டதால் தங்களுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு எட்டப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது, அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”அரசு மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது. நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னையை தீர்க்காதது வருத்தமளிக்கிறது. முதலமைச்சர் பழனிசாமி இந்த விவகாரத்தில் தலையிட்டு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தினார்.
மேலும், மருத்துவர்களும் தங்களது உடல் நலனை பாதிக்காதவாறு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தி.மு.க சார்பில் கேட்டுக்கொண்டார்.
Also Read
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!