M K Stalin

“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இதற்காகத்தான்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபனின் இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கலைவாணன் - ஹேமாமாலினி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளின் போதாமை குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, “நாட்டின் பொருளாதாரம் 5 சதவிகிதம் கீழே சென்றுளள் கொடுமை ஏற்பட்டுள்ளது. இதை மூடி மறைக்க காஷ்மீர் விவகாரம், ப.சிதம்பரம் கைது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளது சுற்றுலாப் பயணமாகவே உள்ளது. இன்னும் 7,8 அமைச்சர்கள் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்ட்டையும் சேர்த்து 5 லட்சம் கோடி ஒப்பந்தம் என்று தெரிவித்துள்ளார்கள்.

அவை எல்லாம் எங்கே? அவை வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. நடந்து முடிந்த 2 முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்டேன். இதுவரை வெளியிடவில்லை.

தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகளுக்காக தி.மு.க குரல் எழுப்பும். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.” எனப் பேசினார் மு.க.ஸ்டாலின்.