M K Stalin

“நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அறிவிக்கவேண்டும்” : முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளையும், உடைமைகளையும் மக்கள் இழந்துள்ளனர். இந்தப் பேரிடரால் நீலகிரி மாவட்டமே துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு நிவாரணப் பணிகளில் மெத்தனம் காட்டி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகள் பலத்த மழையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவலாஞ்சியில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நீலகிரியில் 2 நாட்கள் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதோடு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். நீலகிரி எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் போதாது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கன மழையால் வெள்ள அபாயம், மண் சரிவுகள் போன்ற இயற்கை அழிவுகள் ஏற்படாமல் இருக்க வல்லுநர் குழு அமைத்து உரிய புதிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

நிவாரண உதவிகளை அனைத்துக்கட்சி குழு அமைத்து அக்குழுவினரின் முன்னிலையில் வழங்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ள மக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.