M K Stalin

4 தொகுதி இடைத்தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்!

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, மே 1-ம் தேதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தனது முதற்கட்ட பிரசாரத்தை நடத்தினார்.

இந்நிலையில், நான்கு தொகுதிகளிலும் தனது இரண்டாம் கட்ட வாக்கு சேகரிப்பை இன்று முதல் தொடங்கினார் மு.க.ஸ்டாலின். ஒட்டப்பிடாரத்தில் இன்று தொடங்கிய பிரசாரம் மே 17-ம் தேதி நிறைவடைகிறது.

அவ்வகையில், ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட ராமச்சந்திராபுரத்தில் நடைபயணமாகச் சென்று திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, வழிநெடுகிலும் பொது மக்கள் திரண்டு வந்து தி.மு.க. தலைவரின் வருகைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலினுடன் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து காமராஜர் நகர், ஜக்கம்மாள்புரம் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினிடம், கடுமையான தண்ணீர் பிரச்னையை போக்க தற்போதுள்ள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய தி.மு.க. தலைவர், “உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.