India
வந்தே மாதரம் சட்டத்திற்கு எதிரான வழக்கு : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"வந்தே மாதரம்" தேசியப் பாடலை அவமதித்தால் தண்டனை விதிக்கும் சட்டம், அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்துப் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, "சட்டத்தில் 'தேசியப் பாடல்' என்றால் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை; ஆனால் அதற்கான தண்டனை மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கமாக இரண்டு வரிகள் மட்டும் பாடப்பட்டு வந்த 'வந்தே மாதரம்' பாடலின் வடிவம் தற்போது மாற்றப்பட்டு, (ஆறு சரணங்களையும் பாட வேண்டும் எனப்) புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்குத் தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமல் இது போன்ற சட்டங்களை இயற்றக் கூடாது; மக்களின் கருத்துகளைக் கேட்டுச் சட்டம் இயற்றுவதுதான் ஜனநாயத்திற்குச் சரியான அணுகுமுறையாக இருக்கும்" என்று டி.எம்.கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் முரளிதர் வாதிட்டார்.
அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, "சட்டம் இயற்றுவது என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட வழிமுறை. சட்டம் இயற்றுவதைப் புறக்கணிக்கும் நக்சலைட்டுகள் விரும்புவது போலச் சட்டங்களை இயற்ற முடியாது" என்று தெரிவித்தார்.
சொலிசிட்டர் ஜெனரல் பயன்படுத்திய 'நக்சலைட்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை மூத்த வழக்கறிஞர்கள் முரளிதர் மற்றும் சஞ்சய் ஹெக்டே ஆகியோர் கடுமையாகக் கண்டித்தனர். அந்த வார்த்தையை அவர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் நீதிமன்ற விவாதங்களின் போது இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மேலும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும். அதோடு வந்தே மாதரம் பாடலைப் பாடவில்லை என்று கூறி வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் கூறி , இந்த மனு குறித்து இரண்டு வாரங்களுக்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Also Read
-
“ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக அரசு”: ரகுபதி பதிலடி!
-
மின்வெட்டால் 5 நாட்களில் ரூ.40 கோடி இழப்பு : த.வெ.க அரசுக்கு சுட்டிக்காட்டிய மு.வீரபாண்டியன்!
-
காலை உணவுத் திட்டம் - முதல் நாளே பட்டினியோடு குழந்தைகள்: த.வெ.க அரசுக்கு தி.மு.க ஐடி விங் கடும் கண்டனம்!
-
டெல்லியில் அதிர்ச்சி: துப்பாக்கி முனையில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறை!
-
“சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம்தான் இது.. யாராவது இதை தேர்வு செய்வார்களா?” - முரசொலி தாக்கு!