India
வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!
வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவொக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேக படகு நேற்று (ஜூலை 11) கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரும், கேரளாவைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகளின் தகவலின்படி, படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்தனர். ஹோன் மே ருட் ந்கோய் (Hon May Rut Ngoai) தீவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, கரையிலிருந்து சுமார் 400–500 மீட்டர் தொலைவில் பலத்த காற்று மற்றும் உயர்ந்த அலைகள் காரணமாக படகு கவிழ்ந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்தவுடன் அருகிலிருந்த சுற்றுலா படகுகள், கடலோர காவல்படை மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வியட்நாம் பிரதமர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், சுற்றுலா படகுகளின் பாதுகாப்பு நடைமுறைகளையும் மறுஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அவசர உதவி மையங்களை அமைத்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உள்ளிட்ட 15 இந்தியர்கள் உயிரிழந்த துயர்மிகு செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
உயிரிழந்தோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த கோரச் சம்பவம் குறித்து ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வியட்நாம் நாட்டில் நடந்த படகு விபத்தில் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துயர்மிகுந்த நேரத்தில் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் உள்ளோருக்குத் தரமான சிகிச்சைக் கிடைப்பதை ஒன்றிய அரசும் - மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இறந்தோர் உடல்களைத் தாயகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
நெல்லையில் நடந்த கொடூரம்.. சுற்றி வளைத்த கும்பல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல்.. அச்சத்தில் மக்கள்!
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’
-
‘பவர் சென்டர்’ ஆக முயற்சிக்கும் ஆளுநரின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் : கி.வீரமணி எச்சரிக்கை!
-
முதலமைச்சர் விஜய்க்கு “நாவடக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்று” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி தாக்கு!