India
திருநர்களின் உரிமைகளை பறிக்கும் மசோதா… இந்திய அளவில் கடும் எதிர்ப்பு… பின்வாங்குமா ஒன்றிய பாஜக அரசு!
மக்களவையில் கடந்த மார்ச் 13ம் தேதி திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா முழுக்க முழுக்க திருநங்கைகளின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக உள்ளதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியா பல்வேறு இன, மொழி, மத, கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டது. அதேபோல் பாலின அடையாளங்களிலும் பல்வகைகள் காணப்படுகிறது. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் இந்த நிலைமைதான் காணப்படுகிறது. பல நாடுகள் வெளிப்படையாகவே பாலின அடையாளங்களை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்களையும் இயற்றியுள்ளனர். ஆனால், இந்தியாவில் ஏற்கனவே, “திருநர்” (Transgender) சமூகத்தினர் நீண்ட காலமாக சமூக அங்கீகாரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் பெறுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை மேலும் குறைக்கும் நோக்கிலும் அவர்களின், உரிமைகளையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த மசோதா உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், திருநர் சமூகத்தினருக்கு சம உரிமைகள் வழங்குவதையும், அவர்களின் மனித மரியாதையை பாதுகாப்பதையும் உறுதி செய்வது எனவு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்பு போன்ற அடிப்படை துறைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை நீக்குவது இந்த மசோதாவின் பிரதான அம்சமாகும் என ஒன்றிய பாஜக அரசு கூறிவந்தாலும், அதற்கு நேரெதிராகத் தான் மசோதாவின் அம்சங்கள் உள்ளதாக அச்சமூகத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இந்த மசோதா திருநர் நபர்களின் சுய அடையாள உரிமையை பறிப்பதாகவும், ஒருவர் தம்மை எந்த பாலினமாக அடையாளப்படுத்திக்கொள்கிறாரோ அதனை அரசு சட்ட ரீதியாக ஏற்க வேண்டும் என்பதே இதன் பிரதானமாக உள்ளது. அதன்படி, 2019 சட்டத்தில் இருந்த “self-identification” முறையை நீக்கி, மருத்துவ குழு சான்றிதழ் அவசியம் என மாற்றியிருப்பது, ஒருவர் தனது பாலின அடையாளங்களை தேர்வு செய்வதென்பது இயற்கைக்கு அப்பாற்பட்டு, அவர்களின் பாலின மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வத்தை மருத்துவர்களிடம் சோதித்து சான்றாக பெற வேண்டும் எனவும், அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துத் தான் அடையாள உரிமை பெற வேண்டும் என கூறுகிறது இச்சட்டம்.
இரண்டாவதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கும் பிரிவு இந்த மசோதாவில் மறுத்துள்ளதாகவும். பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட இந்த சமூகத்தினருக்கு சம வாய்ப்புகள் மேலும் புறக்கணிக்கப்படுவதற்கு இது வழிவகுக்கும் என கூறுகின்றனர்.
மேலும், திருநர் சமூகத்துடன் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல், இச்சமூகத்தை விலக்கி வைக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,
இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு திருநர் மசோதா எதிர்ப்பு போராட்டக் குழு, இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. மேலும் இது திருநர் உரிமைகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பான தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் இந்திய யூனியன் (2014) தீர்ப்புக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார தரநிலைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், திருநர் சமூகத்தின் அரை நூற்றாண்டு கால கோரிக்கைகளான, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, வயது தளர்வு மற்றும் மதிப்பெண் தளர்வு, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளுக்கான அணுகல் எளிமையாக்கல், வீட்டு வசதித் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து, தரமான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகள், ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை தற்போது வரை நிறைவேற்றவில்லை.
பாலின சுய அடையாள உரிமையை அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்தில் சட்டம் அல்லது அரசுத் துறைகள் எடுக்கும் முன்னெடுப்புகளில் திருநங்கை, கோத்தி, திருநம்பி, இடைப்பாலினர் மற்றும் பாலின பன்முகத்தன்மை கொண்ட அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வரை தமிழ்நாட்டுன் பல்வேறு இடங்களிலும், இந்தியா முழுவதிலும் இந்த மசோதவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இம்மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ”பாஜக அரசின் திருநங்கைகள் திருத்த மசோதா, திருநங்கைகளின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் அடையாளத்தின் மீதான ஒரு அப்பட்டமான தாக்குதலாகும்.
இந்தப் பிற்போக்குத்தனமான மசோதா, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, திருநங்கைகள் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் திறனைப் பறிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களின் பன்முகப்பட்ட கலாச்சார அடையாளங்களை அழிக்கிறது. திருநங்கைகளை ஒரு மருத்துவக் குழுவின் மனிதாபிமானமற்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தக் கட்டாயப்படுத்துகிறது. எந்தவிதப் பாதுகாப்பு அம்சங்களும் இன்றி குற்றவியல் தண்டனைகளையும் கண்காணிப்பையும் அறிமுகப்படுத்துகிறது. பாஜக அரசு, திருநங்கை சமூகத்தினருடன் கலந்தாலோசிக்காமல், அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாகக் களங்கப்படுத்தும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு இந்தியரின் வாழ்வு, சுதந்திரம், அடையாளம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு தனது குறுகிய கொள்கைகளைப் பின்பற்றும் நோக்கில், நமது அரசியலமைப்பை மீறி, திருநங்கை சமூகங்களைக் கௌரவித்த இந்தியாவின் வளமான வரலாற்றை அழித்து வருகிறது. இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி நிபந்தனையின்றி எதிர்க்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு திருநங்கையர் நல வாரிய உறுப்பினர் அ.ரியா, “திருநர் சமூகத்தின் சுயமரியாதை மற்றும் உரிமைகள் மீதான பிற்போக்குத்தனமான தாக்குதலை நாம் சகித்துக்கொள்ள முடியாது. பாசிச பாஜக அரசு கொண்டுவந்துள்ள 'திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026' என்பது நமது அடையாளத்தை மறுக்கும் முயற்சியாகும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் விளிம்பு நிலையில் உள்ள திருநர் சமூகத்திற்கு சூட்டிய திருநங்கை பெயரை பயன்படுத்த மறுக்கிறது ஒன்றிய அரசு. வெறும் மத அரசியல் வைத்து பிழைப்பு நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு எங்களை கடவுளாக பார்க்க வேண்டாம், மனிதநேயத்தோடு சக மனிதர்களாக பார்க்கக் கூட கருணை இல்லாமல் இருப்பது அச்சத்தை தருகிறது” என தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 'திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா, 2026'-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்த சென்னையில் வாழும் திருநங்கைகள், திருநம்பிகள், இடைப்பாலினத்தோர் மற்றும் பாலின பன்முகத்தன்மை கொண்ட சமூக மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தனிமனித உரிமையை இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் நிலையில், அரசியலமைப்பையும் தனி மனித உரிமைகளையும் துளியும் மதிக்காத இந்த ஒன்றிய பாஜக அரசு அதனை ஒழிக்கும் வேலைகளை மட்டுமே பார்த்து வருகிறது. எப்படி விவசாய சட்ட மசோதாவில் பின்வாங்கியதோ ஒன்றிய அரசு அதே போல இந்த மசோதவிலும் எதிர்ப்பிற்கு அடிபணிந்து விரைவில் பின்வாங்கும்.
Also Read
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!
-
”டெல்லியின் கண்ணசைவிற்கு ஆடும் பழனிசாமி.. இவர் தான் மக்களைக் காப்பாரா?”: அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்!
-
தி.மு.க கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு… இதில் முழு மனநிறைவு: திருமாவளவன் பேட்டி!
-
”இந்தியாவிற்கு போர் நெருக்கடி.. எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது” : முரசொலி தலையங்கம்!
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!