India
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது எதிர்கட்சிகளின் பல கோரிக்கைகளுடன் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலிலும் தமிழ்நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:-
1. கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ன?
சுமார் பதினைந்து பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எண்ணெய் வளங்களை இறக்குமதி செய்வதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு புர்கினா பாசோவுடன் இந்தியா ஏற்படுத்தியிருக்கும் ஒப்பந்தம் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அரசுகளுக்கிடையே முடிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் என்ன? அந்த ஒப்பந்தத்தின் பொருளாதார நம்பகத்தன்மை, புவிசார் அரசியல் தாக்கங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்புகளை அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதா? இந்தியாவின் கச்சா எண்ணெய் ஆதாரத்தை பன்முகப்படுத்தவும் நீண்டகால எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
2. விமான பணியாளர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதுக்காப்பு குறைபாடுகளை களைவது எப்போது?
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) காலியாக உள்ள 50% அதிகமான பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது விமான போக்குவரத்து துறையில் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பண்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவால் வெளியிடப்பட்ட வெளிப்படையான எச்சரிக்கையை ஒன்றிய அரசு ஏன் பரிசீலிக்கவில்லை என திமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயனுள்ள பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு அவசியமானது என்று குழுவால் அறிவிக்கப்பட்ட DGCA-வில் உள்ள அனைத்து முக்கியமான பதவிகளும் எந்த நிரப்பப்படும் காலக்கெடு என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
3. மேகதாது அணையை தடுக்குமா காவிரி மேலாண்மை ஆணையம்?
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜனவரி 6, 2026 அன்று டெல்லியில் 47வது முறையாக நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்கள். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அறிக்கை வெளியிடுமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
4. போதுமான சமையல் எரிவாயுவை மக்களுக்கு வழங்குகிறதா ஒன்றிய அரசு?
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மொத்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட வாரியாக உரிமம் பெற்ற விநியோக நிறுவனங்களின் எண்ணிக்கைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் அ. மணி கேள்வி எழுப்பியுள்ளார். தர்மபுரியில் முழுமையான சமையல் எரிவாயு சேவை செய்யப்படாத பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் மற்றும் அதை களைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அவர் கேட்டுள்ளார்.
5. முத்ரா கடன்கள் பெறுவதை எளிதாக்குக!
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கை குறித்து திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
PMMY கடன்களால் அதிகம் பயனடைந்த துறைகளின் விவரங்கள், இதில் கைவினைஞர் பிரிவுகள், சிறு வணிகர்கள் மற்றும் தமிழ்நாட்டில் சேவை வழங்குநர்கள் எண்ணிக்கை? பெண் தொழில்முனைவோர் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கான கடன் எளிதாக கிடைக்கச் செய்வதை அதிகரிக்க ஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?
ஸ்டாண்ட்-அப் இந்தியா, முத்ரா பிளஸ் திட்டங்கள் மற்றும் மாநில MSME ஆதரவு திட்டங்கள் போன்ற பிற திட்டங்களுடன் PMMY ஐ ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன? தகுதியான பயனாளிகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில், கவரேஜை விரிவுபடுத்துதல், நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் கடன் வரம்புகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன? எனவும் அவர் கேட்டுள்ளார்.
6. ஈரோட்டில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை என்ன?
சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் ஹாசனூர் வழித்தடங்கள் உட்பட தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மொபைல் நெட்வொர்க் திறன் குறித்து அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் பி செல்வராசு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் அரசு கோபுர விரிவாக்கம், ஃபைபர் பேக்ஹால் வலுப்படுத்துதல், கவரேஜ் தணிக்கைகள், டிரைவ் சோதனைகள், சேவை குறைபாடு மற்றும் புகார் தீர்வுக்கான அபராதங்கள் போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நம்பகமான மொபைல் கவரேஜ், மின்தடைகளின் போது விரைவான மறுசீரமைப்பு மற்றும் குறிப்பிட்ட மாவட்டத்தில் சேவை தரங்களை அமல்படுத்துவதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் என்ன? எனவும் அவர் கேட்டுள்ளார்.
7. கிராமப்புறங்களில் எப்போது கிடைக்கும் 5G மொபைல் சேவைகள்?
2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐந்தாம் தலைமுறை மொபைல் சேவைகளை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை கிராமப்புறங்களிலும் விரிவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிவேக நெட்வொர்க் பரப்பளவை உறுதி செய்வதற்காக அரசாங்கமும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நிறுவிய 5G அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை?குறித்த விவரங்களையும் அவர் கேட்டுள்ளார்.
8. மீனவர்கள் கைது விவகாரத்தில் மெத்தனமாக இருக்கும் ஒன்றிய அரசு!
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் ஆண்டு வாரியாகவும் நாடு வாரியாகவும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை, மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழு நடத்திய கூட்டங்களின் விவரங்கள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
9. குலசேகரப்பட்டினத்தில் விண்வெளித் திட்டப்பணிகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் இலக்கு என்ன?
குலசேகரப்பட்டினத்தில் விண்வெளித் திட்டப்பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் உண்மையான செலவின விவரங்கள், டிசம்பர், 2026க்குள் முதல் ராக்கெட் ஏவுதலுக்கான திட்டங்கள், இரண்டாவது விண்வெளித் திட்டப்பணியின் மேலாண்மை மற்றும் செயல்பாடுகளில் பாலின சமத்துவத்துடன் தலைமை பொறுப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் வசதி முழுமையாக இயக்கப்பட்டவுடன் வருடாந்திர ஏவுதலின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
10. உயர்தர கனிமங்களுக்கான சந்தையை இந்தியா மேம்படுத்துகிறதா?
முக்கியமான கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் பன்முகப்படுத்துதல் குறித்து விவாதிக்க வாஷிங்டனில் நடைபெற்ற முக்கியமான கனிமங்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரிய மண் கனிம விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சுத்திகரிப்பு மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்கள், உயர்தர கனிமங்களுக்கான நீண்டகால சந்தை மற்றும் விநியோகங்களைப் பாதுகாப்பதற்கான நிலையான முறைகள் குறித்தும் புதிய திட்டங்களுக்கு போதுமான நிதியைப் பெறுவதற்கு, கழிவுகளிலிருந்து கனிமங்களை மறுசுழற்சி செய்வதற்கு, தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளுக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள்? குறித்தும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!
-
”அடுத்து வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும்... மக்களுக்கான திட்டங்கள்” :துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து புகைப்படக் கண்காட்சி… நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர்!
-
250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!