India

பிரதமர் மோடியால் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட இந்தியா : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் அனைத்தும் ஒன்றிய பா.ஜ.க அரசின் வெளியுறவுக் கொள்கை தோற்று வருவதையே உணர்த்துகின்றன. முதலில் இந்தியாவுக்கு வரிச்சுமையை அதிகப்படுத்தினார். இந்தியாவில்இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதலில் 25 விழுக்காடு வரியை அதிகப்படுத்தினார்.

பின்னர், கூடுதலாக 25 விழுக்காடு வரியை அதிகரித்துள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி இனி செலுத்த வேண்டும்.

தற்போது உச்சகட்டமாக, ஹெச் 1 பி விசா கட்டணம் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் 88 லட்சம் செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பெரும் பாதிப்பை அடைவார்கள்.

இப்படி இந்தியாவின் மீது எல்லாவகையிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒன்றிய பா.ஜ.க., அரசு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ”பிரதமர் என்பவர் நாட்டின் தேசிய நலனை முன்னணியில் வைத்திருக்க வேண்டும். மிகவும் பிற்போக்குத்தனமாக செயல்பட்டு வருகிறார் மோடி.

பிரதமர் மோடியின் ஆணவத்தனம் அவருக்கே எதிராக மாறி இன்று சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு திருட்டு மோசடியை அரங்கேற்றி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு" என தெரிவித்துள்ளார்.

Also Read: வெளிநாட்டிலும் பலவீனமாகிவிட்டது மோடியின் பிம்பம் : வெளியுறவுக் கொள்கையின் தோல்வி - முரசொலி!