India

5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடும் யோகி ஆதித்யநாத் அரசு : பெற்றோர்கள் கண்டனம் - மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க., அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலம் ஏற்கனவே கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில், அதனை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியம் காட்டப்படுகிறது.

இதற்கு ஏற்கனவே அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வரும் நிலையில், யோகி அரசு தற்போது, மிக மோசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் அரசு பள்ளிகளை முட யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பள்ளிகளை மூடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் அரசு பள்ளிக் கூடங்களை இப்படி பொறுப்பற்ற காரணங்களை மேற்கோள் காட்டி மூடுவது மிகவும் மோசமான செயல் என பலரும் விமர்சித்துள்ளனர். எவ்வளவு நிதி பிரச்சனை வந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு, பள்ளிகளை தொடர்ந்து வழிநடத்தி, ஏழை, எளிய மாணவ சமுதாயத்தின் கல்வி கண்களை திறப்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அதனை விடுத்து, ஏதோ வணிகம் செய்வதை போல், நிதி பற்றாக்குறை எனக் கூறி பள்ளிகளை மூடுவது, அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்தாயிரம் அரசு பள்ளிகளை மூடுவது என்பது மிக, மிக மோசமான செயல் என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளை மூடும் முடிவை உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க., அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், கல்வித்துறைக்கு உரிய நிதி ஒதுக்கி அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்புற வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்திய மாணவர் சங்கத்தினர் பா.ஜ.க அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் : 35.5 லட்சம் பேரை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு!