India
பாக். கொடியுடன் சவுதி அரேபிய கொடியையும் அவமதித்த கும்பல்.. உ.பி-யில் அரங்கேறிய சம்பவம் -குவியும் கண்டனம்!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மூலம் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பாகிஸ்தானை பெருமளவில் சீண்டிய நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா மீண்டும் பதில் தாக்குதல் கொடுத்தது.
தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக கருத்துகளும் கூட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றது. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் பலரும் குரல் எழுப்பி வந்தனர்.
இந்த சூழலில் வழக்கம்போல் பாஜக ஆளும் மாநிலங்களில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானின் கொடியை காலில் மிதித்து அவமதித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள சிலர் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்நாட்டின் தேசிய கொடியை காலில் போட்டு மிதித்து அவமதித்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் கொடியுடன் சேர்ந்து சவூதி அரேபியா கொடியையும் காலில் போட்டு மிதித்துள்ளனர். மேலும் இஸ்லாமியர்களின் புனித வாக்கியங்கள் அடங்கிய பிரின்ட் அவுட் பேப்பரையும் மிதித்து அவமதித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய இஸ்லாமிய மக்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இஸ்லாமியர்களின் புனித வாக்கியங்களை சிலர் அவமதித்துள்ளனர். மேலும் எந்த பிரச்சினையும் இல்லாத சவூதி அரேபியாவின் கொடியையும் காலால் மிதித்து அவமதித்துள்ளனர். ஒரு சிலரின் இது போன்ற செயல் மத வெறுப்பு பிரச்சாரம் போல் உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவடைந்துள்ள நிலையில், ஒரு சிலரின் இதுபோன்ற செயல்கள் இந்தியர்கள் மத்தியிலேயே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!