India
நீட் மோசடி : மாணவரிடம் ரூ.1,250 வாங்கி கொண்டு போலி Hall Ticket வழங்கிய பெண்.. தட்டி தூக்கிய கேரள போலீஸ்!
நாடு முழுவதும் நேற்று (மே 04) இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. வழக்கம்போல் பல பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்ட நிலையில், சட்டையில் பட்டன் இருப்பதை அதிகாரிகள் நீக்கினர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பகுதி ஒன்றில் ஒரு மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த பெண் காவலர் அவரை அழைத்துக்கொண்டு வேறொரு ஆடையை வாங்கி கொண்டு நீட் தேர்வுக்கு அனுப்பி வைத்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், கேரளாவில் ஹால் டிக்கெட்டை வேண்டுமென்றே மாற்றி கொடுத்த இ-சேவை மைய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள தைக்காவு அரசு மேல்நிலைப் பள்ளியின் மையத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது அங்கு தேர்வு எழுதுவதற்காக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜித்து என்ற மாணவர் தனது தாயாருடன் வந்துள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஹால் டிக்கெட்டை அதிகாரிகளிடம் காண்பித்தபோது, பெயர் ஒன்றாக இருந்தாலும், உள்ளே சுய-அறிவிப்பு இருந்த சில விவரங்கள் அபிராம் என்று வேறொரு பெயரில் இருந்தது.
ஆரம்பத்தில் இதனை அச்சுப் பிழை என்று எண்ணிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கையில், அபிராம் என்ற மற்றொரு மாணவர் திருவனந்தபுரத்தில் உள்ள வேறொரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவது உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நீட் தேர்வில் ஹால் டிக்கெட் மோசடி குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் மாணவர் ஜித்து மற்றும் அவரது தாயாரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கையில், மாணவர் ஜித்து, தனது நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை, நெய்யாற்றின்கரையில் உள்ள அக்ஷயா மையத்தில் (கேரள அரசு அனுமதியுடன் இயங்கும் இ-சேவை மையம்) பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த இ-சேவை மையத்திற்கு சென்று போலீசார் விசாரிக்கையில், அந்த பெண் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதாவது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த பெண் ஊழியர் மாணவர் ஜித்துவுக்கு விண்ணப்பிக்க மறந்துள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து ரூ.1,250 பெற்றுக்கொண்டார். இந்த சூழலில் தேர்வுக்கு முன்னால், அந்த பெண்ணிடம் ஜித்துவின் தாய் ஹால் டிக்கெட் கேட்டுள்ளார். இதனால் பதறிப்போன அந்த பெண், மாணவர் அபிராம் என்ற மாணவருடைய ஹால் டிக்கெட்டை காபி செய்து பெயரை மாற்றி வாட்சப் மூலம் ஜித்துவுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த விஷயம் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மோசடி செய்த அக்ஷயா மையத்தின் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பெண் ஊழியர் இதுபோல் வேறு ஏதாவது மாணவரிடம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !