India

”துரோணாச்சாரியார் போல் இந்திய மக்களின் கட்டை விரலை கேட்கும் பாஜக அரசு” : மக்களவையில் ராகுல் காந்தி சாடல்!

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மக்களவையில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடந்து வருகிறது. இதில், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்பு சட்டம் 75 ஆண்டுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, " நான் ஆளும் கட்சியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்கள் தலைவரின் வார்த்தைகளுக்கு நீங்கள் நிற்கிறீர்களா? உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஏனெனில் அரசியலமைப்பைப் பாதுகாப்பது பற்றி நாடாளுமன்றத்தில், நீங்கள் பேசுவது ​​சாவர்க்கரை கேலி செய்வதுபோன்றும், அவதூறாகவும் பேசுவதுபோல் உள்ளது.

ஏன் என்றால் அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைத்தார் என்பதில் இருந்து எனது உரையை தொடங்க நினைக்கிறேன். ”இந்து தேசத்திற்கு வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக்கூடிய வேதம் மனுஸ்மிருதியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமது பண்டைய காலம், நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைக்கு அடிப்படையாக மாறியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தை குறியீடாக்கியுள்ளது. மனுஸ்மிருதிதான் சட்டம்" இதுதான் சாவர்க்கரின் வார்த்தைகள்.

இந்தியாவில் இன்று ஒரு போர் நடக்கிறது. ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு பாதுகாவலர்களாக உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் எங்களிடம் உள்ளனர். தமிழ்நாடு என்று கேட்டால் கேட்டால் பெரியார் எங்களிடம் இருக்கிறார். கர்நாடகா என்று கேட்டால் எங்களிடம் பசவண்ணா இருக்கிறார். மகாராஷ்டிரா என்று கேட்டால் ஜோதிராவ் புலே, அம்பேத்கர் என்று சொல்வோம். குஜராத்தைப் பற்றி கேட்டால், மகாத்மா காந்தி இருக்கிறார் என்று சொல்வோம். மற்றொரு பக்கம் அதை அழிக்க நினைக்க இருக்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சிந்தனைகள் இடம்பெற்றிருக்கும். அரசியல் சாசனம் ஏக போகத்துக்கு எதிரானது. அதனால்தான் பா.ஜ.க 24 மணி நேரமும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.

துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியது போல், ஒன்றிய பா.ஜ.க அரசாங்கம் இந்திய மக்களின் கட்டை விரலை வெட்டுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். மும்பை தாராவியை அதானிக்கு வழங்கியதன் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கட்டை விரலை வெட்டுகிறார்கள்.

இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையை அதானியிடம் ஒப்படைக்கும்போது, ​​நேர்மையாக உழைக்கும் நியாயமான வணிகர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். அக்னிவீர் திட்டம் மூலம் இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். வினாத்தாள் கசிவு மூலம் மாணவர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். ஒன்றிய பாஜக அரசு துரோணாச்சாரியாராக செயல்படுகிறது.

மத அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? பாஜக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: கலைஞர் கைவினை திட்டத்தை விமர்சிப்பது, மக்களை விமர்சிப்பதற்கு சமம்: அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!