India

”அதானியை இன்னும் எத்தனை காலத்துக்கு காப்பாற்றுவீர்கள்?” : ஒன்றிய அரசுக்கு பிரியங்கா சதுர்வேதி கேள்வி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளான நேற்று, அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது தினக்கொண்டாட்டம் அனுசரிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது குடியரசுத்தலைவரின் உரையில், "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் உட்பட அரசியலமைப்பின் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. ஏற்கனவே இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு விரோதமான வக்ப் வாரியம் திருத்தச்சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைக்கான சட்டமசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு துடிக்கிறது.

அதோடு அதானி முறைகேடு குறித்தும் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. கடந்த ஒருவாரமாக அவை ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் விவாதம் நடத்த மறுத்து, எதிர்க்கட்சிகள் அவையை முடக்குவதாக ஒன்றிய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் சிவசேனை (உத்தவ் தாக்கரே) பிரிவு எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ”அவையில் களேபரம் எல்லாம் ஏற்படவில்லை. அதானி என பெயரை சொன்னாலே போதும். அவர்கள் அவையை ஒத்தி வைத்து விடுகிறார்கள். அமெரிக்க நீதிமன்றம் அதானியை குற்றஞ்சாட்டியிருக்கிறது. எத்தனை காலத்துக்கு அதானியை காப்பாற்றப் போகிறது ஒன்றிய அரசு?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: மீண்டும் விவசாயிகள் போராட்டம் : டெல்லியை நோக்கி முன்னேறும் உ.பி. விவசாயிகள் !