India

”நாட்டின் உண்மை நிலையை வெளியிட மறுக்கும் மோடியின் விசுவாசமான ஊடகங்கள்” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!

"நாட்டின் உண்மை நிலை குறித்த செய்திகளை வெளியிட பிரதமர் மோடியின் விசுவாசமான ஊடகங்கள் மறுக்கிறது"என ராகுல் காந்தி சமூகவலைத்தளப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோடியின் ஊடக நண்பர்கள் நாட்டைப் பற்றிய உண்மையை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்றும், நாட்டுக்கு உண்மையைச் சொல்ல சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தனது நிகழ்ச்சியில், மைக்கை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு சகோதரரிடம் அளித்ததாகவும், அவர் மூலம் ஏழைத் தொழிலாளர்களின் நிலையை அனைவரும் கேட்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியமர்த்தும் போக்கை மோடி அரசு ஊக்குவிப்பதாகவும், 2011ஆம் ஆண்டு வரை 28 சதவீதம் தொழிற்சாலைகளில் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர், 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 98 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவதால் ஒவ்வொரு தொழிலாளியும் நலிவடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் கூட வழக்கமான நேரத்தை விட கூடுதலாக வேலை செய்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பிஎஃப், ஓய்வூதியம் கிடைக்கவில்லை, எனவே ஒவ்வொரு தொழிலாளியும் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை இருண்டதாகப் பார்க்கிறார்கள் என்றும் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைக்கும் இந்தத் தொழிலாளர்களை வலுப்படுத்த காங்கிரஸ் விரும்புவதாகவும், ஆனால், பா.ஜ.க. அவர்களை ஒரு சில சக்தி வாய்ந்தவர்களின் அடிமைகளாக ஆக்க விரும்புகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

Also Read: இடைக்கால பட்ஜெட் : “நிதி அமைச்சருக்கு அவரது கணவரே பதிலளித்துள்ளார்...” - முரசொலி தாக்கு !