India

ஜோடோ நீதி நடைப்பயணத்தின் போது நடந்த தாக்குதல் : உடைக்கப்பட்ட ராகுல் காந்தியின் கார் கண்ணாடி ?

கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையான பாரத் ஜோடோ நீதி யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி. மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது. மணிப்பூர், நாகாலாந்தில் யாத்திரை முடிந்ததை அடுத்துக் கடந்த ஜன.18ம் தேதி ராகுல் காந்தியின் நடைப்பயணம் அசாமிற்கு வந்தது.

அங்கு ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது அங்கு வந்து பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக கோஷமெழுப்பினர். ஆனால், அவர்களை கண்டதும் ராகுல் காந்தி பேருந்தில் இருந்து இறங்கி அவர்களிடம் அன்பை வெளிப்படுத்தினார்.

பின்னர் அசாமில் காலை ராகுல் காந்தி ஶ்ரீ சங்கர தேவ் கோயிலுக்கு சென்றார். ஆனால், கோவிலின் முன்பு நின்ற பொலிஸார் கோவிலுக்குள் விடாமல் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவருக்கு அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரின் நடைப்பயணம் பீகார் மாநிலத்தில் நுழைந்தது. பீகாரில் 3-வது நாளாக அவரின் நடைப்பயணம் நடைபெற்றுவந்த நிலையில், இன்று காலை அவரின் நடைபயணம் மேற்குவங்கத்துக்குள் நுழைந்தது. அங்கு கட்டிஹார் என்ற இடத்தில் இன்று நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென அவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் ராகுல் காந்திக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செயலில் ஈடுபட்டு வென்ற பாஜக : வெளியான சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி !