India

தமிழ்நாட்டை மட்டும் குறிவைப்பது ஏன்? : ED-க்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சரமாரி கேள்வி!

திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "தமிழ்நாட்டை மட்டும் அமலாக்கத்துறை குறிவைப்பதாக கூறினார்.

மேலும், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை இப்படித்தான் செயல்படுகிறதா?. அசாம் முதலமைச்சர் மீது FIR இருக்கிறது. ஆனால் ஏன் விசாரணைகள் நடத்தப்படவில்லை? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதோடு, ஒருசில மாநிலங்களை குறிவைத்தே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் செயல்படுவதாகவும் கபில் சிபல் குற்றஞ்சாட்டினார். லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட அங்கித் திவாரியின் மீதான விசாரணையை அமலாக்கத்துறை முடக்க முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து சிபிஐ - அமலாக்கத்துறை - மாநில அரசுகள் இடையே பிரச்சனை வருவதால், இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசே சட்டம் இயற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியது. தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்றும் தெரிவித்தது. அங்கித் திவாரி வழக்கு விசாரணையின் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Also Read: அரசின் திட்டங்களை வேண்டும் என்றே தவிர்த்த ஆளுநர்: ஒரு நிமிடத்தில் உரையை முடித்து கொண்ட ஆரிப் முகமது கான்!