India

”ஒற்றை கட்சி ஆட்சியை ஏற்படுத்தப் பார்க்கும் மோடி அரசு” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசு கேள்வி கேட்ட 141 எம்.பிக்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்துள்ளது. இன்று கூட 2 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஒன்றிய அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜனநாயகத்தின் மீதும், நாடாளுமன்றத்தின் முக்கிய தூண்களான அமைப்புகளின் மீதும் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகத்தின் குரல்வலையை பா.ஜ.க நெரித்து வருகிறது" என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூகவலைதள பதிவில், "நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாடு குறித்து உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்டதற்கு 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது என்ன வகையான விசாரணை? நாடாளுமன்ற பாதுகாப்புக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகள் இதற்கு ஏன் பொறுப்பேற்கவில்லை?. உள்துறை தோல்விக்கு யார் காரணம்?

பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் நாட்டில் ஒற்றை கட்சி ஆட்சியை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஏக் அகேலா என்று பேசுகிறார்கள், இது ஜனநாயகத்தைத் தகர்ப்பதற்கு ஒப்பானது. எதிர்க்கட்சிகளை இடைநீக்கம் செய்ததன் மூலம் துல்லியமாக இதனை செய்யத் துணிந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா” : உ.பியில் புது ரீல் விட்ட பிரதமர் மோடி!