India

டெல்லி மெட்ரோ ரயிலில் சிக்கிய ஆடை.. இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண் : இறுதியில் நடந்தது என்ன ?

டெல்லியில் 35 வயதான ரீனா என்ற பெண் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனிடையே கடந்த வியாழக்கிழமை ரீனா டெல்லி மெட்ரோவில் பயணம் செய்ய இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து மோகன் என்ற இடத்துக்கு செல்லும் ரயிலில் அவர் ஏறியுள்ளார். அப்போது திடீரென அவரது ஆடை ரயிலில் சிக்கியுள்ளது. இதனால் ரயிலில் ஏறமுடியாமல் அவர் இருந்தபோது கதவுகள் மூடி ரயில் கிளம்பியுள்ளது.

இதனால், ரீனா ரயிலில் சிக்கிய நிலையில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த நிலையில், ரீனாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அனுஜ் தயாள் விளக்கமளித்துள்ளார்.

அதில், இது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், அவரின் குடும்பத்தினருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "நாடாளுமன்ற தாக்குதலுக்கு ஒன்றிய அரசு பொறுப்பு கிடையாது" - பாஜக எம்.பியின் கருத்தால் சர்ச்சை !