India

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.5 லட்சம் கடத்தல் மதுபானங்களை திருடிய போலிஸ்: குஜராத் மாநிலத்தில் நடந்த அவலம்!

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட மதுபானங்களை மீட்ட போலிஸார் மீண்டும் அந்த மதுபானங்களைத் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு உட்பட்ட பாக்கூர் சரக பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றில் சோதனை செய்தபோது மின்விசிறி பெட்டிகளில் உயர்ரக மதுபானங்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1.5 லட்சமாகும்.

இதையடுத்து போலிஸார் மதுபானங்களைப் பறிமுதல் செய்து பாக்கூர் காவல்நிலையத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டிவைத்தனர். பிறகு உயர் அதிகாரிகள் வந்து பார்த்தபோது அந்த அறையிலிருந்த மதுபாட்டில்கள் பல காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உதவி ஆய்வாளர் அந்த அறைக்கு வந்து சென்றது தெரியவந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மின் விசிறிகள் திருடியது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக சக போலிஸாரும் இருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் உட்பட 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட மதுபானங்களை மீட்டு மீண்டும் போலிஸாரே திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த மர்ம நபர்கள்.. கண்டு கொள்ளாததால் ஆசிட் வீச்சு? - வலை வீசும் போலிஸ்!