India

நாட்டிலேயே முதல் முறை.. சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்ட பீகார்.. இந்தியா கூட்டணி ஆதரவு !

நாடு சுதந்திரம் அடையும் முன்பு சில வகுப்பை சேர்ந்த மக்கள் ஒடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட முக்கிய உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதனை முன்னிட்டு தந்தை பெரியார் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அதில் ஒன்றுதான் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்தியாவில் 1871-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து1881-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், அதில் சாதிவாரி குறித்த எந்த விவரமும் எடுக்கப்படவில்லை.

1931-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை வைத்தே சாதி ரீதியான இடஒதுக்கீடு வகைப்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலகட்டமான கடந்த 2011-ம் ஆண்டு நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டன.

ஆனால் அதன்பிறகு 2014-ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக ஆட்சியமைத்த பிறகு அதனை வெளியிடவில்லை. மேலும் அதில் பிழை இருப்பதாகவும், தவறாக இருப்பதாகவும் கூறி அதனை வெளியிட மறுத்துவிட்டது. தொடர்ந்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நடைபெற்று வந்த விசாரணையிலும் கூட ஒன்றிய அரசு பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி வெளியிட முடியாது என்று கூறி வந்தது.

இருப்பினும் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வந்தது. ஆனால் அதனை ஒன்றிய பாஜக அரசு செவி மடுக்கவில்லை. இந்த சூழலில்தான் பீகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்பு பணியைத் தொடங்கியது.

இந்த நிலையில், இன்று பீகார் மாநிலம் சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட வருடங்களுக்கு பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த கணக்கெடுப்பில் பீகாரில் அதிகபட்சமாக MBC பிரிவை சேர்ந்தவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

* பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர்.

* இதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள்.

* 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 %) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள்.

* 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்

* 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 %) பேர் பழங்குடியினத்தைச் (ST) சேர்ந்தவர்கள்.

* 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 %) பேர் பொது பிரிவினர்.

* இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதமும் உள்ளனர்.

- இந்தத் தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்ட தகவல்களே. எந்தவிதமான பகுப்பாய்வும் செய்யப்படவில்லை என்று அறிக்கையை வெளியிட்ட விவேக் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “காவிரி விவகாரத்தில் பிரச்சனையை உண்டாக்குவதே பாஜகதான்” - வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி !