India

புதுச்சேரி மின்துறையில் ரூ.82 லட்சம் கையாடல்.. காசாளருக்கு 5 ஆண்டு சிறை.. சம்பவத்தின் பின்னணி என்ன ?

புதுச்சேரி, லாஸ்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (61). மின்துறையில் தலைமை அலுவலகத்தில் இளநிலை மின்துறை வருவாய் பிரிவு காசாளராக பணியாற்றி வந்தார். இதனால் இவர் மின்கட்டணம் செலுத்துவோரிடமிருந்து பெறப்படும் பணத்தை வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2004 - 2005ம் ஆண்டுகளில் இவர் ரூ.82.17 லட்சத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

அதாவது அந்த சமயத்தில் நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் பணத்தை வங்கியில் செலுத்தாமலே ரசீதை மட்டும் தனது உயர் அதிகாரியான பெருமாளிடம் கொடுத்து வந்துள்ளார். பணம் செலுத்ததாது குறித்து 2005 ஆம் ஆண்டு பொது தணிக்கையின் போது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை என்பதால் அவர் கையாடல் செய்ததாக சண்முகசுந்தரம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து இதனை கண்காணிக்கத் தவறிய மின்துறை அலுவலர் பெருமாள் மீதும் புகார் எழுந்ததையடுத்து, இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது முதல் குற்றவாளியான சண்முகசுந்தரத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன.

ஆனால் தனது சொத்தில் ஒன்றை நீதிமன்றத்துக்கு தெரியாமல் இவர் விற்றுள்ளார். இதற்கு சார்பதிவாளர் ராதாகிருஷ்ணன் என்பவரும் உதவி புரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து ராதாகிருஷ்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பெருமாளும், ராதாகிருஷ்ணனும் மரணமடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சண்முக சுந்தரத்திற்கு, நம்பிக்கை மோசடி குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: "குறைந்தபட்சம் பத்திரிக்கை செய்திகளைப் படித்து விட்டு குறைகூறுங்கள்".. தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!