India
”அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடைய பணம்?.. மோடிக்கு ராகுல் கேள்வி!
அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் வைத்த குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், வேறு வழியின்றி அது குறித்த விசாரணைக்கு பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி ஒப்புக்கொண்டது. எனினும் அது குறித்த விவரங்கள் முறையாக வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், OCCRP என்ற அமைப்பு மறைமுகமாகவும், முறைகேடாகவும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாக வர்த்தக தொடர்பு கொண்டுள்ள நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் ஆகியோர் அதானி குழும பங்குகளை சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு வாங்கியதாகவும், இதனால் அதானி நிறுவனங்களின் 75 % அதிகமான பங்கீட்டை கொண்டு அதானி நிறுவன பங்கை செயற்கையாக உயர்த்தியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அதானியின் போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடைய பணம்? என ராகுல் காந்தி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து இரண்டு சர்வதேச பத்திரிகைகளில் இன்று கட்டுரைகள் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இருந்து பணம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அதானி மூலம் இந்தியா திரும்பி இருக்கிறது. இது யாருடைய பணம்?. என்பதுதான் முக்கிய கேள்வி.
அதானியின் போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி யாருடைய பணம்?அதானி முறைகேடு குறித்து பிரதமர் எந்த விசாரணைக்கும் உத்தரவிடாதது ஏன்?
அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் இந்தியாவின் நன்மதிப்பிற்கு உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழும முறைகேட்டிற்கு மூளையாக இருப்பது கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி. இந்த முறைகேட்டில் மேலும் இரண்டுபேர் உள்ளனர். இதில் ஒருவர் நசீர் அலி ஷபான். மற்றொருவர் சீனாவை சேர்ந்த சாங் சுங்க லிங். அதானி குழுமம் என்றால் விசாரணை கூட நடத்தக்கூடாது என்கிறாரா பிரதமர் மோடி?.. அதானியை பிரதமர் மோடி தொடர்ந்து பாதுகாப்பதன் மர்மம் என்ன?" என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!