India

பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டு.. தொடர் கைவரிசை காட்டி வந்த வாலிபர் சிக்கியது எப்படி?

புதுச்சேரியை சேர்ந்தவர் விநாயகம். இவர் தவளக்குப்பத்தில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது படிப்புக்குத் தேவையான புத்தகங்களைச் சென்னையைச் சேர்ந்த நண்பரிடம் கேட்டிருந்தார். இதையடுத்து அவர்கள் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பேருந்தில் புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியுள்ளனர். இது குறித்து நண்பர்கள் விநாயகத்திற்குத் தெரிவித்துள்ளனர். பின்னர் புத்தகங்களை வாங்கிச் செல்வதற்காக நேற்று அதிகாலை புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு விநாயகம் வந்துள்ளார்.

பிறகு பேருந்து வருவதற்குச் சற்று தாமதமானதால் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். அப்போது அவரின் சட்டை மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை யாரோ எடுப்பதை உணர்ந்த கண்விழுந்த போது வாலிபர் ஒருவர் செல்போனை எடுத்துக் கொண்டு ஓடினார். உடனே விநாயகம் அவரை பின்தொடர்ந்து சென்றாலும் வாலிபர் இவரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை விநாயகம் அவரது நண்பர்களுடன் பேருந்து நிலையம் வந்து செல்போன் திருடிய வாலிபர் இருக்கிறாரா? என கண்காணித்தார். அப்போது செல்போன் திருடிய வாலிபர் அங்கு இருந்ததைக் கண்டு விநாயகம் மற்றும் அவரது நண்பர்கள் மடக்கிப்பிடித்தனர்.

இதையடுத்து அவரை உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில் செல்போனை திருடிச் சென்றதை வாலிபர் ஒப்புக் கொண்டார். இவர் நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது பேருந்து நிலையத்தில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருப்பவர்களின் செல்போன்களை திருடிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது. பின்னர் போலிஸார் அவரை கைது செய்து அவரிடம் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 9 செல்போன்களை மீட்டனர்.

Also Read: பெற்றோர்களே உஷார்.. 8 மாத குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: அதிர்ச்சி சம்பவம்!