India

காதலன் கண்முன்னே பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமை .. ABVP மாணவர்கள் வெறிச்செயல் ? - பின்னணி என்ன ?

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலிருந்து 17 வயது சிறுமி ஒருவரும் அவரது காதலனும் இரவு நேரத்தில் ஜோத்பூர் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் அங்கிருக்கும் விடுதியில் தங்க முயன்றபோது, அதில் இருக்கும் பராமரிப்பாளர் சுரேஷ் ஜாட் என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ளவே, அங்கிருந்து இருவரும் வெளியேறு வேறு இடத்தை தேடி அழைத்து கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் அழைத்து திரிவதை கண்ட 3 இளைஞர்கள் அவர்களிடம் போய் பேச்சுவார்த்தை கொடுத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் என வாங்கி கொடுத்து கவனமாக பார்த்துக்கொண்டனர். இதனால் இவர்களும் தங்கள் நிலைமையை எடுத்து கூறவே, தாங்கள் உதவி செய்வதாக கூறினர் அந்த இளைஞர்கள்.

அதனை இவர்களும் நம்பவே உடனே அவர்கள் சொல்வதை கேட்டுள்ளனர். அதன்படி தங்களை ரயில் நிலையத்துக்கு அழைத்து செல்வதாக கூறிய அந்த இளைஞர்கள், சிறுமியையும் அவரது காதலனையும் ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகத்தின் (JNVU) ஹாக்கி மைதானத்துக்கு அதிகாலை சுமார் 4 மணி அளவில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கே வைத்து சிறுமியின் காதலனை சரமாரியாக தாக்கிய அவர்கள், அவரது கண்முன்னே சிறுமியை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் கதறி அழுத காதலனை அவர்கள் தாக்கியுள்ளனர். தொடர்ந்து மைதானத்துக்கு வாக்கிங் செல்பவர்கள் வர தொடங்கவே, இந்த இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து வந்தவர்களிடம் காதலன் கதறி அழுது உதவி கேட்கவே, அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சமந்தர் சிங், தரம்பால் சிங், பட்டம் சிங் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் இதில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து மோப்ப நாய் உதவியோடு ஜோத்பூரின் ரத்தநாடா அருகே கணேஷ்புராவிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

ஆனால் போலீஸ் வருவதை அறிந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி மேற்கொள்ளும்போது 3 பேருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரிக்கையில், அதில் ஒருவர் முதலாமாண்டு மாணவர் என்றும், மற்றொருவர் முதுகலை மாணவர் என்றும், மற்றும் ஒருவர் அஜ்மீரில் பி.எட் படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அந்த 3 பேரும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாணவ அமைப்பான ABVP சார்பாக மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாணவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததும், அவர்கள் அனைவரும் அந்த மாணவர் அமைப்பில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவினர் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் லட்சணம் இது தான் என்று விமர்சித்ததோடு இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளைஞர்.. மின் கம்பியில் சிக்கி நேர்ந்த சோகம் - நடந்தது என்ன?