India

ஒடிசாவை தொடர்ந்து தெலங்கானா.. ஓடிக்கொண்டிருந்த போது திடீரென பற்றி எரிந்த ரயில்.. பயணிகளின் கதி என்ன?

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பகிடிப்பள்ளி. இங்கு இன்று ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துக் கொண்டிருந்தது. கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து தெலங்கானாவின் செகந்திராபாத்துக்கு பயணிகளுடன் விரைவு இரயில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அந்த இரயில் பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைப்பள்ளி இடையே வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

சுமார் 3 பெட்டிகள் தீ பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறினர். தொடர்ந்து இதுகுறித்து இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக மீட்புக்குழு வரவாய்க்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் இரயிலுக்குள் சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். 3 பெட்டிகளில் இருந்தும் பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்ட நிலையில், உயிர் சேதம் எதுவுமில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் தீ விபத்து ஏற்பட்டவுடனே பெட்டிகளின் இணைப்பை துண்டித்ததால் மற்ற பெட்டிகள் தீ விபத்தில் இருந்து தப்பித்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் ஷார்ட் சர்கியூட் என அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து எங்கிருந்து தொடங்கியது, என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூன் முதல் வாரத்தில் ஒடிசாவில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த இரயில் தடம் புரண்டதில் 3 இரயில்கள் மோதியதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்; 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தொடர்ந்து ரயில் விபத்து குறித்த செய்திகள் வெளியாகி வரும் சூழலில் தெலங்கானாவில் ஓடிக்கொண்டிருந்த இரயில் தீ பிடித்து எரிந்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் பதற்றத்தை உருவாகியுள்ளது.

Also Read: சாலையோரம் கிடந்த சடலம்.. போலிஸ் விசாரணையில் சிக்கிய மனைவி, கடன் காரன்.. பெங்களுருவில் நடந்த பகீர் !