India

ஒடிசா ரயில் விபத்து.. அடையாளம் காண முடியாத 83 பேரில் உடல்கள்.. இடப்பற்றாக்குறையால் சிக்கலில் மாநில அரசு !

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 280 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நிறைவடைந்து ரயில் வழித்தடங்களை சீரமைக்கும் பணி முடிவடைந்து அந்த வழியில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இந்த கோர விபத்துக்கு காரணம் ஒன்றிய அரசின் அலட்சியம் என எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் 83 பேரின் உடல்கள் பலவற்றை யார் என்றே அடையாளம் காணமுடியாத நிலையில், தற்போது அந்த சடலங்கள் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு போதிய இடமில்லாத நிலையில், சில உடல்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட டிரக்குகளில் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் விரைவில் இந்த உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், அப்படி செய்யமுடியாத நிலை ஏற்பட்டால் சேதமடைந்த சடலங்களை பாதுகாப்பாக வைக்க முடியாது என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஒரிசா அரசுக்கு பெரும் சவால் நிலை ஏற்பட்டுள்ளது.

அதோடு உடல்கள் மேலும் சேதமடைந்தால் அவர்களை அவர்கள் உறவினரால் கூட அடையாளம் காண முடியாது என்றும், இதனால் உறவினர்களை அடையாளம் காண்பதில் ஒன்றிய அரசு வேகம் காட்டவேண்டும் என்றும் ஒடிசா அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் தற்போது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

Also Read: ரயில் விபத்தால் நாடே அதிர்ந்தபோது குளு குளு வாசத்தில் அரசியல் நடத்திய ஆளுநர் -சிலந்தி கட்டுரை விமர்சனம் !