India

நான் ஜே.பி நட்டா உதவியாளர்.. அமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் என்று பாஜக MLA-விடம் ரூ.1.66 லட்சம் மோசடி!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் நீரஜ் சிங் ரத்தோட். இவர் தன்னை ஜே.பி நட்டாவின் உதவியாளர் என கூறிக்கொண்டு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பலரைத் தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது அவர்களிடம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் போது உங்களுக்கு முக்கிய துறைகளை வாங்கி தருவதாகக் கூறி ஆசையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு அவர்களிடம் பேரமும் பேசியுள்ளார்

இதை உண்மை என்று நம்பிய விகாஸ் கும்பேரா ரூ.1.66 லட்சம் வரை நீரஜ் சிங் ரத்தோடிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இவர் மீது சந்தேகம் அடைந்த விகாஸ் கும்பேரா நாக்பூர் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, விகாஸ் கும்பேராவை போன்று பல பா.ஜ.க எம்.எல்.ஏக்களிடம் அமைச்சர் பதவி வாங்கி தருவதாக நீரஜ் சிங் ரத்தோட் பேரம் பேசி பல கோடிகள் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து குஜராத் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த நீரஜ் சிங் ரத்தோட்டை போலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நாராயன் குசே, டேக்சந்த் சாவர்க்கர் மற்றும் தானாஜி முட்குலே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களிடம் நீரஜ் சிங் ரத்தோட் பேரம் பேசியது தெரியவந்துள்ளது.

அதோடு கோவா, நாகாலாந்திலும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜே.பி நட்டாவின் பெயரைப் பயன்படுத்தி இப்படி மோசடி நடந்துள்ள சம்பவம் பா.ஜ.கவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஓரே ஆண்டில் 35% வீழ்ச்சியை சந்தித்த LIC.. மோடியின் சதியால் 1.89 லட்சம் கோடியை இழந்த அரசின் நிறுவனம் !