India

பற்றியெரியும் மணிப்பூர்.. இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட பெரும் கலவரம்.. தமிழர் சொத்துகள் தீக்கிரை !

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து. இந்த நிலையில், சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் வன்முறை பரவ வாய்ப்புள்ளது என்பதால் மாநிலம் முழுக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், அங்கு குறிப்பிட்ட இரு சமூக மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. மோரே நகரில் மைத்தேயி குழுவினரை இலக்கு வைத்து குக்கி இனத்தவர் தாக்கிய நிலையில், அந்த பகுதியில் வசித்துவந்த தமிழ் சமூக மக்களின் சொத்துக்களும் தீக்கிரையாகின.

தமிழர்களின் சில வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில், தமிழர்களுக்கு சொந்தமான சில உணவகங்களும் எரிக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தால் மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் மணிப்பூரில் தமிழர்கள் இலக்குவைத்து தாக்கப்படவில்லை என்றும் தாக்குதலில் நடுவே அவர்களும் சிக்கிக்கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “விளம்பரப்பலகை வைப்பதற்கு சட்டத்திருத்தம்கொண்டு வந்தது ஏன்?” -அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை மூலம் விளக்கம்