India

இறந்ததாக பிணவறைக்கு மாற்றப்பட்ட தேர்தல் அதிகாரி.. உறவினர்கள் வந்ததும் தெரியவந்த உண்மை.. நடந்தது என்ன ?

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜகதீஷ். கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இவர் தற்போது தேர்தல் அதிகாரியாக பணிசெய்து வருகிறார். இவருக்கு சாமராஜ்நகர் மாவட்டம், ஹனூர் நகரில் பணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள பள்ளியொன்றில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது பயிற்சி முடிந்து அங்குள்ள படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால்தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே நினைவிழந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அவரின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் அவரின் சடலத்தை கண்டு அழுதுகொண்டிருந்தபோது அவரின் உடலில் அசைவுகள் இருப்பதை கண்டு மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி அவரை மீண்டும் பரிசோதனை செய்தபோது அவருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த நிலையில், அவர் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயிரோடு இருந்தவர்கள் இறந்துவிட்டார் என சான்று கொடுத்த மருத்துவர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: குணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி.. காப்பாற்றிய பின்னர் கொலைசெய்ய கணவர்.. நடந்தது என்ன ?