India

”சீனா மீது ஏன் இத்தனை பயம்?”.. பிரதமர் மோடிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்தாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்திருந்தது. பின்னர் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சீன ராணுவம் பின்வாங்கியது.

அதேபோல், அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியுள்ளது. இப்படித் தொடர்ந்து சீனா இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எவ்விதமான பதிலடி கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து சீன விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அதற்கு தெற்கு திபெத் என்ற அறிவிப்பைச் சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒன்றிய அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசின் விளக்கத்தில், "சீனா இதுபோன்று செய்வது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன் 2017ம் ஆண்டில், சீன சிவில் விவகார அமைச்சகம் இதே போன்ற 6 இடங்களின் பட்டியலை வெளியிட்டது. பின்னர் 2021ம் ஆண்டிலும் 15 இடங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது.

இப்போது 11 இடங்களின் பெயரை வெளியிட்டுள்ளதே தவிர அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் வசம் தான் இருக்கும். அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும். சீனாவின் அறிவிப்பு எந்த ஒரு எதார்த்தத்தையும் மாற்றது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "சீனா இதுவரை 2000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைப் பறித்துள்ளது. அவ்வப்போது பெயர் மாற்றங்களும் நடக்கிறது. பிரதமர் மவுனமாக இருக்கிறார். பதிலே இல்லை!" பிரதமரே, ஏன் இத்தனை பயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: நிலக்கரி சுரங்கம் - ”தன்னிச்சையாக செயல்படும் ஒன்றிய அரசு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!