India

கேரள தமிழ் MLA-வின் வெற்றி செல்லாது.. போலி சான்றிதழ் தொடர்பான புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி !

கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவிக்குளம் தொகுதியில் ராஜா என்பவர் போட்டியிட்டார்.

இவர் தன்னை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட டி. குமார் என்பவரை 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். சட்டமன்றத்தில் இவர் தமிழில் பதவி பிரமாணம் எடுத்தது தமிழ்நாட்டில் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது என ராஜாவிடம் தோல்வியைத் தழுவிய டி. குமார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ராஜா தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுத்ததாகவும், அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க போலி சான்றிதழை சமர்ப்பித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ராஜாவின் திருமணம் தேவாலயத்தில் நடந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் ராஜா சட்டமன்ற உறுப்பினரானது செல்லாது என்றும், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய அவருக்கு வழங்கிய சாதி சான்றிதழ் செல்லாது என்றும் நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கு கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவிகுளம் தொகுதியில் கிட்டத்தட்ட 62% தமிழர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ராஜதானி ரயிலில் மது கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ராணுவவீரர் கைது.. கேரளாவில் பரபரப்பு !