India

45 நாட்களில் 8வது சம்பவம்.. கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த குஜராத் நபர்.. சுருண்டு விழுந்து உயிரிழப்பு !

குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் மயூர். 45 வயதுடைய இவர் அந்த பகுதியில் நகைகளை ஒன்றை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் அந்த பகுதியில் வாழ்ந்து வரும் இவர் மட்டுமே, அவர் குடும்பத்தில் சம்பாதித்து வருகிறார்.

இவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளதால் அந்த பகுதியிலுள்ள சாஸ்திரி மைதானத்தில் அடிக்கடி தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார். இதனால் இவர் சற்று உடற்பயிற்சி பெறுவது போன்றும் உணர்ந்துள்ளார். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இவர் அந்த கிரிக்கெட் மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் இவர் திடீரென பதற்றமடையவே கீழே அமர்ந்தார். தொடர்ந்து அவர் தன்னிலை மறந்து நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்தார். இதனை கண்ட அவரது நண்பர்கள் பதற்றமடைந்து அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே மயூரின் உறவினர்கள், அவரை கண்டு கதறி அழுதனர். மேலும் அவர் மட்டுமே வீட்டில் சம்பாதிக்கும் நபர் என்றும், இனி என்ன செய்வது என்றும் புலம்பி அழுதனர். அதோடு அவருக்கு மது, புகை என எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லை என்றும் குடும்பத்தார் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த நிகழ்வால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத், 34 வயது இளைஞர்

முன்னதாக இதே போல் குஜராத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்ததில் இது 8-வது நிகழ்வாகும். குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி கூட SGST துறையில் பணிபுரியும் 34 வயது இளைஞர் ஒருவர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது போன்று கடந்த 45 நாட்களில் 8 சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சம்பவம் குஜராத்தில் தொடர்ந்து நடைபெறுவதால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், சோகமும் ஏற்பட்டுள்ளது.

Also Read: மூஞ்சிய உடைச்சுருவேன், வெறில இருக்கேன்.. ஐயப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல்: TTF VASAN மீது பாய்ந்த வழக்கு